பாம்புக்கும் திரைப்படத்திற்கும் ஒப்புமை ! (தனிப்பாடல்.193)
------------------------------------------------------------------------------------
பாடல்களில் இரட்டுற மொழிதல் என்பது ஒருவகை. இதைச் ‘சிலேடை’ என்றும்
சொல்வார்கள். இரட்டுற மொழிதலில் வல்லவர் காளமேகப் புலவர். சந்தக்
கவிமணி தமிழழகனார் படைத்த ஒரு இரட்டுற மொழியும் பாடல் !
------------------------------------------------------------------------------------
பெட்டிக்குள் ளேசுருளும் பின்படமே தான்காட்டும் !
முட்டிக்கொண் டோடுவரே முன்பார்க்க - கொட்டகையில்
ஆடும் இசையோடும் ஆடும்போ தேநகரும்,
பாடுந் திரைப்படந்தான் பாம்பு !
-----------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்:
-----------------------------------------------------------------------------------
பெட்டிக்குள்ளே சுருளும் ! பின்,
படமே காட்டும் !
முட்டிக் கொண்டு ஓடுவரே
முன் பார்க்க ! – கொட்டகையில்
ஆடும் இசையோடும் ! ஆடும்
போதே நகரும் !
பாடும் திரைப்படம்தான், பாம்பு
!
-----------------------------------------------------------------------------------
பாம்பு:
------------
பாம்பாட்டியின் பெட்டிக்குள் சுருண்டு படுத்திருக்கும் ; பெட்டியைத் திறந்தால் தலையை உயர்த்திப் படம் எடுத்து ஆடும் ; பாம்பாட்டி வேடிக்கை காட்டுகிறார் என்றால் முட்டி மோதிக் கொண்டு மக்கள் விரைந்து ஓடுவார்கள் ;( கொட்டு அகையில் = பெட்டியிலிருந்து வெளியே எடுத்து விடுகையில் ) பாம்பாட்டி தன் பெட்டியிலிருந்து பாம்பை எடுத்து வெளியே விட்டால், மகுடி இசைக்கேற்ப அது ஆடும் ; அவ்வாறு ஆடும்போது அசைந்து அசைந்து நகர்ந்து ஆடும் !
திரைப்படம்:
--------------------
திரைப்படம் பெட்டிக்குள் சுருள் வடிவில் இருக்கும் ; அதை எடுத்து படப் பெருக்கியில் (PROJECTOR) இணைத்து இயக்கினால் திரையில் படத்தைக் காட்டும் ; படத்தை முன் வரிசை இருக்கையில் அமர்ந்து பார்ப்பதற்காக மக்கள் முட்டி மோதிக் கொண்டு நுழைவுச் சீட்டு வாங்கிக் கொண்டு ஓடுவார்கள் ; கொட்டகையில் உள்ள திரையில் படம் ஆடும் (ஓடும்) ; அவ்வாறு ஓடுகையில் இசையும் அதனுடன் சேர்ந்துகொள்ளும் ; படம் ஓடும் போதே அடுத்தடுத்த காட்சிகள் ஒவ்வொன்றாக நகரும் !
ஆகையால் பாம்பும் திரைப்படமும் ஒன்றுக்கொன்று ஒப்புமையானது ஆகும் !
-----------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(maraimani2021@gmail.com)
ஆட்சியர்,
"தமிழ்ப் பொய்கை” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு: 2053,மடங்கல் (ஆவணி)06]
{22-08-2022}