புலவர் பலர் யாத்த பூந்தமிழ்ப் பாடல்களின் அணிவகுப்பு !

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2022

மலர் (53) நற்றிணை - பொங்குதிரை பொருத வார்மணல் !

நெய்தல் நிலப் பரப்பில் ஒரு  காட்சி !


கடற்கரையோரம் பலவிதமான மரங்கள் வளர்ந்து உயர்ந்திருந்தன. அவற்றுளொன்று நாவல் மரம். நாவல் மரத்தில் பழங்கள் கருநீல நிறத்தில் உருண்டு திரண்டு பழுத்திருந்தன !

 

பழத்தை உண்பதற்கு ஓரிரு  பறவைகள் வந்து அமர்ந்த அசைவினாலா அல்லது மெல்லியதாய் வீசிய காற்றினாலா என்று தெரியவில்லை, ஒரு பெரிய நாவற்பழம் உதிர்ந்து கீழே விழுந்தது. இதை மரத்தின் கிளைகளில் அமர்ந்திருந்த வண்டுகள் பார்த்துவிடுகின்றன !

 

அந்தப் பழத்தை இன்னொரு வண்டு என்று நம்பிய வண்டுகள், நாவற்பழம் விழுந்த இடத்தில் வந்து சூழ்ந்துகொள்கின்றன !

 

அருகே ஈர மணற்பரப்பில் உலவிக் கொண்டிருந்தது நண்டு ஒன்று. அது கருவண்டுகளைப் பழம் என்று எண்ணிக் கவ்வ முற்பட்டது. நண்டைப் பார்த்ததும் வண்டுகள் ஊங்காரமிட்டுக் உலவத் தொடங்கின !

 

கடற்கரை ஓரம் மீனுக்காகக் கவனமாகக் காத்திருந்த நாரை, இதைப் பார்த்துவிட்டு, அங்கு ஏதோ சண்டை நடக்கிறது, நாம் போய் இணக்கமாகப் பேசித் தீர்த்து வைப்போம் என்று கிளம்பியது !

 

காற்றில் பழம் விழுவது இயற்கை. வண்டுகள் பழமரத்தைச் சுற்றிப் பறப்பதும் இயற்கை. கடற்கரையோரம், நண்டு, நாரைகள் காணப்படுவதும் இயற்கை. இம்மூன்றையும் இணைத்து அழகான பாடலாகப் படைத்திருக்கிறார் அம்மூவனார் என்னும் ஆன்ற தமிழ்ப் புலவர் ! இதோ அந்தப் பாடல்:-

------------------------------------------------------------------------------------

 

பொங்குதிரை பொருத வார்மண லடைகரைப்

புன்கால் நாவற் பொதிப்புற இருங்கனி

கிளை செத்து மொய்த்த தும்பி பழஞ்சொத்துப்

பல்கால் அலவன் கொண்ட கோள் கூர்ந்து

கொள்ளா நரம்பின் இமிரும் பூசல்

இரைதேர் நாரை எய்தி விடுக்கும் ! (நற்.35)

 

-------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

---------------------------------------

பொங்கு திரை = பொங்கி வரும் அலைகள்

பொருத = வந்து மோத

வார்மணல் அடைகரை = மணல் படிந்த கரையில்

புன்கால் = மெல்லிய காம்பு

இருங்கனி = பெரிய பழம்

கிளை செத்து மொய்த்த தும்பி = காய்ந்த கிளைகளில் அமர்ந்திருந்த வண்டுகள்

பல்கால் அலவன் = பல கால்களை உடைய நண்டு

கொள்ளா நரம்பின் = இசைகருவியின் நரம்பிலிருந்து எழுகின்ற

இமிரும் பூசல் = வண்டுகளின் ஊங்கார ஒலியைக் கேட்டு ஏதோ சண்டை நடப்பதாக எண்ணி,

இரைதேர் நாரை = மீனுக்காக காத்திருக்கும் நாரை,

எண்ணி விடுக்கும் = எண்ணிக்கொண்டு அந்த இடத்தை நோக்கிக் கிளம்பியது.

 

-------------------------------------------------------------------------------------

கருத்துரை:

-----------------------

அலைகள் திரும்பத் திரும்ப  வந்து மோதி, கடற்கரையோரம் பரந்து விரிந்து திரண்ட மணற் பரப்பை உருவாக்கியிருந்தது. அங்கு  ஓங்கி வளர்ந்திருந்த நாவல் மரத்தில் நிரம்பவும் பழங்கள் பழுத்திருந்தன. அந்த மரத்திலிருந்து கருநீல நிறம் கொண்ட பெரிய நாவற்பழம் ஒன்று உதிர்ந்து மணலில் விழுந்தது. நாவல் மரத்தின் காய்ந்த கிளையிலிருந்து அதைக் கண்ணுற்ற வண்டுகள் நாவற்பழத்தை இன்னொரு வண்டு என்று நினைத்து அங்கிருந்து பறந்து வந்து நாவற்பழம் விழுந்த இடத்தில்  சூழ்ந்துகொள்கின்றன !

 

அருகே ஈர மணற்பரப்பில் உலவிக் கொண்டிருந்தது நண்டு ஒன்று. அது கருவண்டுகளை நாவற்பழம் என்று எண்ணி அவற்றைக் கவ்வ முற்பட்டது. நண்டைப் பார்த்ததும் வண்டுகள் ஊங்கார ஒலி எழுப்பத்  தொடங்கின !

 

கடற்கரை ஓரம் மீனுக்காகக் கவனமாகக் காத்திருந்த நாரை ஒன்று இதைப் பார்த்துவிட்டு, அங்கு ஏதோ சண்டை நடக்கிறது, நாம் போய் இணக்கமாகப் பேசித் தீர்த்து வைப்போம் என்று கிளம்பியது !


நற்றிணையில் இடம்பெற்றிருக்கும் இந்தப் பாடலுக்கு அகப்பொருளாக வேறொரு கருத்து உண்டு. அது தலைவன் தலைவியைப் பற்றியது !


எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான 'நற்றிணை', 9 அடிச் சிற்றெல்லையும், 12 அடி பேரெல்லையும் உடையது. 400 பாடல்களைக் கொண்டது பல புலவர்களால் பாடப்பட்டது. அகப்பொருளைக் கொண்டது. நற்றிணை நானூறு என்றும் இதற்குப் பெயருண்டு !

 

பன்னாடு தந்த மாறன் வழுதி இந்நூலை தொகுத்தார். நற்றிணைப் பாடல்கள் அக்காலத் தமிழர்களின் ஒழுகலாற்றை   அறியத்  துணை புரிகின்றன !

 

--------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(maraimani2021@gmail.com)

ஆட்சியர்,

“தமிழ்ப்பொய்கை” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, கடகம் (ஆடி) 30]

{15-08-2022}

--------------------------------------------------------------------------------------



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக