புலவர் பலர் யாத்த பூந்தமிழ்ப் பாடல்களின் அணிவகுப்பு !

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2022

மலர் (52) குறுந்தொகை - குன்றக் கூகை குழறினும் !

பண்டைத் தமிழகத்தில் களவொழுக்கம்கற்பொழுக்கம் என இருவகை ஒழுக்கங்கள் இலக்கியங்களில் பேசப்படுகின்றன !


பண்டைத் தமிழகத்தில்ஆண் பெண் இருவரும்  அன்பு பூண்டு  ஒழுகுதலும், மணம் புரிந்து வாழ்தலும்  களவொழுக்கம், கற்பொழுக்கம் என இருவகையாக இலக்கியங்களில் பேசப்படுகின்றன !

 

தலைவனும் தலைவியும்  ஒருவரையொருவர் விரும்பி  ஊராருக்குத் தெரியாமல்  மறைந்து ஒழுகுதல் களவொழுக்கம் எனப்பெற்றதுகளவொழுக்கம் முற்றி, இருவரும் திருமணம் செய்து கொண்டு  இல்லற நெறிகளைக் கடைப்பிடித்து வாழ்வது கற்பொழுக்கம் எனப்பெற்றது !

 

தலைவன்  தலைவியைக் காண இரவில் வருகிறான்தலைவனின் வருகை, அவன் வருகின்ற நெடு வழி, அதை எண்ணி முன்பு அஞ்சியமை, பின்பு தலைவனின் வீரத்தை  எண்ணி  அச்சம் நீங்கியமை ஆகியவை பற்றித் தலைவி  தன் உள்ளக் கிடக்கையை  ஒரு பாடலில் வெளிப்படுத்துகிறாள் !

 

குறுந்தொகை என்னும் பண்டை இலக்கியத்தில் வரும் அந்தப் பாடலைப் பார்ப்போமா !  இதோ அந்தப் பாடல் !

----------------------------------------------------------------------------------------

குறுந்தொகை (153)

-------------------------------

 

குன்றக்  கூகை  குழறினும், முன்றிற்

பலவின்  இருஞ்  சினைக்  கலை  பாய்ந்து  உகளினும்,

அஞ்சும்மன்;  அளித்து    என் நெஞ்சம் ! – இனியே,

ஆர்  இருட்  கங்குல்  அவர்  வயின்

சாரல்  நீள்  இடைச்  செலவு  ஆனாதே !

 

----------------------------------------------------------------------------------------

பாடலின் பொருள்:

------------------------------

 

முன்பெல்லாம்,  அருகிலிருக்கும்  மலைக் குன்றுகளிலிருந்து கோட்டான் அலறினாலும், பலா மரத்தின் கரிய கிளைகளிலிருந்து  ஆண்குரங்கு   தாவிக் குதித்தாலும், தலைவனுக்கு ஏதும் ஊறு நேர்ந்திருக்குமோ என்று என் உள்ளம் அஞ்சும் !

 

இப்போது அந்த அச்சமெல்லாம் போய்விட்டது ! தலைவனின் வீரம் என் மனதில் நம்பிக்கையைத்  தந்திருக்கிறது !  மிகுந்த  இருளையுடைய  இரவில், மலைச் சாரலில்  உள்ள நெடிய வழியில்,  அவர் வந்து போகும் போது என் நெஞ்சம் அவர் பின்னாலேயே  தவறாமல் செல்கிறது;  என் செயல் இரங்குதற்குரியதாக இருக்கிறது !

 

-----------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்: 

------------------------------------

 

குன்றம் = மலைக் குன்று; கூகை = கோட்டான் (ஒரு வகை பெரிய ஆந்தை)குழறுதல் =  கூவுதல் ; முன்றில் = முற்றம்வீட்டின் முன்னிடம்பலவின் = பலா மரத்தின் ; இரும் = கரியசினை = கிளைகலை = ஆண் குரங்குஉகளுதல் = தாவுதல் அஞ்சும் = அஞ்சியது ; அளித்து = இரங்கத் தக்கது ; ஆர் இருள் = செறிந்த இருள் சூழ்ந்த ; கங்குல் = இரவு ; அவர் வயின் = அவர் வருகையில்; சாரல் = மலைச் சாரல்; நீள் இடை = நெடிய வழியில் ; செலவு = பயணம்;  ஆனாதே = அவர் நினைவு என்னை விட்டு நீங்காது  அவரிடமே செல்கிறது !

 

---------------------------------------------------------------------------------------

ஆக்கம் & இடுகை,

வை.வேதரெத்தினம்,

(maraimani2021@gmail.com)

ஆட்சியர்,

"தமிழ்ப் பொய்கை” வலைப்பூ,

[வள்ளுவராண்டு: 2053, கடகம் (ஆடி) 29]

(14-08-2022)

----------------------------------------------------------------------------------------

கூகை



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக