புலவர் பலர் யாத்த பூந்தமிழ்ப் பாடல்களின் அணிவகுப்பு !

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 16 நவம்பர், 2022

மலர் (59) குறுந்தொகை - வில்லோன் காலன கழலே !

 

மூங்கில் தூர்களும் வாகை மரங்களும் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் காணப்படும் வறண்ட  பாலை நிலத்தில், ஆண்மகன் ஒருவனும் பெண்மகள் ஒருத்தியும், நடந்து செல்கின்றனர்.  அவன்  அணிந்துள்ள வீரக் கழல்களையும், அவள்  அணிந்துள்ள சிலம்பையும்  காணும் வழிப் போக்கர்கள், இருவருக்கும் இன்னும் மணமாகவில்லை என்பதை உணர்ந்து, இவர்கள் யாரோ, இந்தப் பாலை நிலத்தில் கால்கள் வருந்த நடந்து செல்கின்றனரே என்று இரக்கத்துடன் பேசிக் கொள்கின்றனர் ! இந்தக் காட்சியை விவரிக்கும் குறுந்தொகைச் செய்யுளைப் பாருங்கள் !

-----------------------------------------------------

குறுந்தொகைப் பாடல் எண் (07)

-----------------------------------------------------

இயற்றியவர் : பெரும்பதுமனார்

-----------------------------------------------------------

 

வில்லோன் காலன கழலே; தொடியோள்

மெல்லடி மேலவும் சிலம்பே; நல்லோர்

யார்கொல் ? அளியர் தாமே ! ஆரியர்

கயிறாடு பறையிற் கால்பொரக் கலங்கி,

வாகை வெண்ணெற் றொலிக்கும்,

வேய்பயில் அழுவம், முன்னி யோரே !

 

(தலைவனும் தலைவியும் தம் பெற்றோரைத் துறந்து பாலைநிலத்தின்  வழியே நடந்து செல்கையில் அவ்விருவருக்கும் மணம் நடைபெறவில்லை என்பதை எதிரே வந்தவர்கள்,  உணர்ந்து இரங்கிக் கூறியது.)

----------------------------------

அருஞ்சொற்பொருள்:

---------------------------------------

 

வில்லோன் = கைகளில் வில்லை ஏந்தியுள்ள இவன்; காலன = கால்களில்; கழலே = வீரக் கழல்கள் காணப்படுகின்றன; தொடியோள் = தோள்களில் வளையணிந்துள்ள இவள்; மெல்லடி மேலவும் = மென்மையான பாதங்களுக்கு மேல்; சிலம்பே = சிலம்பு அணிந்திருக்கிறாள்; நல்லோர் யார் கொல் ? = இத்தகைய நன்மக்கள் யாரோ? ; அளியர் தாமே = இந்தப் பாலை நிலத்தில் காலடி நோக நடந்து செல்லும் இவர்களைக் காண்கையில் இரக்கம் உண்டாகிறது;

 

ஆரியர் = கழைக் கூத்தர்கள்; கயிறாடு பறையில் = கயிற்றின் மீது நின்றுகொண்டு ஆடுகையில் இசை கூட்டுவதற்காக தட்டப்படும் பறையொலி போல்; கால்பொரக் கலங்கிமேல் காற்றால் அலைப்புற்று ; வாகை = வாகை மரத்தின்; வெண்ணெற்று = வெள்ளிய நிற நெற்றுகள் கல கலவென ஒலிக்கவும்; வேய் பயில் அழுவம் = மூங்கில் தூர்கள் ஆங்காங்கே காணப்படும் இந்தப் பாலை நிலத்தில்; முன்னியோர் = எதிரில் வருவோர்.

--------------------------------

பாடலின் பொருள்:

----------------------------

குறுக்காகப் பிணைத்த மூங்கில் குச்சிகளில் கட்டிய கயிற்றின் மேல் நின்று ஆரியக்கூத்தர் கழைக் கூத்தாடுவர்அப்பொழுது இசை கூட்டுவதற்காகக் பறை கொட்டப்படும்.  அந்தப் பறையொலியைப் போல மேல்காற்றின் தாக்குதலால் வாகை மரத்தின் நெற்றுகள் கல கலவென ஒலிக்கின்றன ! அவற்றினருகே மூங்கில்  தூர்களின் பருத்த கொம்புகள்   காற்றில் அசைந்து வளைந்து ஆடுகின்றன !

 

இத்தகைய வறண்ட பாலை நிலப் பரப்பில் டந்து செல்லும் இந்த ஆடவனின்  கைகளில் வில்லும் அம்பும் இருக்கின்றன! அவன் கால்களில் உள்ள வீரக் கழல்கள் அவனுக்குத் திருமணமாகவில்லை என்பதைக் காட்டுகிறது !

 

தோள்களில் வளையணிந்த இப்பெண்மகளின்   மெல்லிய கால்களில் அணிந்துள்ள சிலம்புகள், அவளுக்கும் இன்னும் திருமணமாகவில்லை என்பதைச் சொல்கிறது !

 

இந்த நல்லோர்  யாரோ ?   வறண்ட இந்தப் பாலை நிலம் இவர்கள் கால்களை  வருத்துமே !  ஐயோ பாவம் ! இன்னும் மணம் புரிந்து கொள்ளாத இவர்களின் நிலை மிகவும் வருந்தத் தக்கது !

----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(maraimani2021@gmail.com)

ஆட்சியர்,

”தமிழ்ப் பொய்கை” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, துலை (ஐப்பசி) 30]

{16-11-2022}

----------------------------------------------------------------------------------------