எளிய மனிதன் வாழ்வில் ஏற்றம் பெறுவதும் உண்டு !
நலங்கிள்ளி பத்தாம் வகுப்புப் படித்து முடித்து விட்டு, வேலை தேடி அலைந்து கொண்டிருந்தான். வேலை கிடைத்தபாடில்லை ! ஒரு நாள்
மனச் சோர்வுடன் குளக்கரை ஆல மரத்தடியில்
வந்து அமர்ந்தான் !
அங்கு நிழலில் படுத்திருந்த ஒரு முதியவர், அவனைப் பார்த்து, “ஏன் தம்பி சோர்வாக இருக்கிறாய் ? என்ன காரணம் ?” என்று அன்பாகக் கேட்டார். நலங்கிள்ளி தன் சோர்வுக்கான காரணத்தைக் கூறினான் !
முதியவர் அவனுக்கு மனத்தெம்பூட்டும் வகையில் பேசினார். அவரது பேச்சில் ஈர்ப்புக் கொண்ட நலங்கிள்ளி, அவரைப் பற்றி உசாவினான். தான் கோயில் வாசலில் அமர்ந்து பிச்சை எடுக்கும் ஒரு இரவலர் என்றும், தனக்குக் குடும்பமோ பிள்ளை குட்டிகளோ கிடையாது என்றும் கூறினார் !
நலங்கிள்ளியின் இல்லத்தில் அவனது தந்தை, தாய், ஒரு தங்கை அவன் உள்பட நான்கு பேர் உள்ளதாகவும், தந்தை கூலித் தொழிலாளி என்றும் அவரது வருமானம் குடும்பச் செலவுக்கு மட்டுமெ போதுமானதாக இருப்பதாகவும் கூறினான் !
அவனது பேச்சினைக் கேட்ட முதியவர், வேலை கிடைக்காவிட்டால் என்ன, சிறிய அளவில் கடை வைத்து வருவாய் ஈட்டலாமே என்று தனது கருத்தை எடுத்துச் சொன்னார் !
கடை வைக்கும் அளவுக்கு முதலீடு செய்யத் தன் தந்தையிடம் பணமில்லை என்பதை நலங்கிள்ளி அவரிடம் எடுத்துச் சொன்னான். அதைக் கேட்ட முதியவர், ” தம்பி ! கடை வைக்கலாம் என்பதை நீ ஏற்றுக் கொள்வதாக இருந்தால் பணத்திற்கு நான் வழிவகை செய்கிறேன்” என்றார் !
அவரை வியப்புடன் நோக்கிய நலங்கிள்ளி,” ஏற்றுக் கொள்கிறேன் ஐயா !” என்றான். அவர், “வா ! உன் வீட்டிற்குச் செல்வோம்” என்று அழைத்தார். இருவருமாக, நலங்கிள்ளி வீட்டை அடைந்தனர். நலங்கிள்ளியின் தந்தையுடன் முதியவர் கலந்து உரையாடினார் !
நலங்கிள்ளியின் தந்தையிடம் அவர், “ஐயா ! என்னிடம் பத்தாயிரம் உருபா பணம் இருக்கிறது, பிச்சை எடுத்துச் சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்திருக்கிறேன். அதைத் தருகிறேன். அதை வைத்து நலங்கிள்ளி சிறிய அளவில் ஒரு கடை தொடங்கட்டும்” என்றார் !
”உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்வதானால், நான் சொல்வதையும் நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்; உங்களுக்கோ குடும்பம் , மனைவி, மக்கள் என்று ஏதுமில்லை என்கிறீர்கள்; அப்படி இருக்கையில் , நீங்களும் எங்கள் வீட்டிலேயே எங்களுடன் சேர்ந்து வாழ ஒப்புக் கொள்வதானால், உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறோம்” என்றார் !
இருதரப்பினரும் ஒப்புக்கொள்ள, ஒரு நல்ல நாளில் நலங்கிள்ளி சிறிய அளவில் கடை ஒன்றைத் திறந்தான். ஊர் மக்கள் மெல்ல மெல்ல அவன் கடையில் பொருள்கள் வாங்கத் தொடங்கினர் !
ஆனால், ஊர் மக்களில் இன்னொரு பகுதியினர், சின்னஞ்சிறிய கடையை வைத்துக் கொண்டு நலங்கிள்ளி எப்படிப் பிழைக்கமுடியும், கடைக்கான முதலீடு போதாது; கடையை விரைவில் இழுத்து மூடிவிடுவான் என்று கேலி பேசலானார்கள் !
நலங்கிள்ளியை இளக்காரமாகப் பார்க்கலானார்கள் ! அவன் செய்திருப்பது சிறு முதலீடு என்றாலும், அதையே ஊர்க்காரர்களில் சிலர் பேசு பொருளாக மாற்றி அவனைச் சிறுமைப்படுத்த முயன்றார்கள் !
ஊர்க்காரர்களின் இளக்காரப் பேச்சு நலங்கிள்ளியை உசுப்பி விட்டது. கடுமையாக உழைத்தான்; கடை வணிகம் சூடு பிடித்தது. ஆதாயம் பெருகியது; கடை விரிவாகியது; எந்தப் பொருளைக் கேட்டாலும் “இல்லை” என்று சொல்லாத அளவுக்கு, அவன் பொருள்களை வாங்கி இருப்பு வைத்தான் !
ஏழை வீட்டுப் பையனாக இருந்த நலங்கிள்ளி, முதியவரின் பண உதவியாலும், தனது கடுமையான உழைப்பாலும், நேர்மையான செயல்படுகளாலும், தனது கடையை விரிவு படுத்தி, அதைச் சிறப்பங்காடி (SUPER MARKET) என்ற அளவுக்கு உயர்த்தி இருக்கிறான் !
இதைத் தான் பண்டைப் புலவர் முன்றுறை அரையனார் தனது பாடல் மூலம் உலகோருக்கு அறிவிக்கிறார்,’”ஒருவனிடம் உள்ளது மிகச் சிறிய முதலீடு என்றாலும், ஊர்க்காரர்கள் அதை இளக்காரமாக எண்ணலாகாது; ஏனெனில் கடைத் தெருவிலே கிடைத்ததை உண்டு வாழும் பழைய கன்று என்றாலும், பிற்காலத்தில் அது வீறு மிக்க ஏறு (கம்பீரமான காளை) ஆதலும் உண்டு” !
இதோ அந்தப் பாடல் !
----------------------------------------------------------------------------------
பழமொழி நானூறு (பாடல்.108)
----------------------------------------------------------------------------------
உள்ளூ ரவரால் உணர்ந்தாம்
முதலெனினும்
எள்ளாமை வேண்டும்; இலங்கிழாய் ! – தள்ளாது
அழுங்கல் முதுபதி அங்காடி
மேயும்
பழங்கன்று ஏறாதலும் உண்டு.
--------------------------------------------------------------------------------
பாடலின் கருத்துரை:
--------------------------------------------------------------------------------
ஒரு மனிதனிடம் உள்ளது மிகச் சிறிய செல்வம் தான் (முதலீடு
தான்) என்று தெரியவந்தாலும் உள்ளூர்க்காரர்கள் அவனை ஏளனம் செய்யக் கூடாது ! இளக்காரமாகப்
பார்க்கக்கூடாது ! ஏனெனில், இன்று கடைத்தெருவில் திரிந்து அலைந்து , கிடைத்தவற்றை உண்டு வாழும்
சிறு கன்று கூட பிற்காலத்தில்
வீறுமிக்க ஏறாக (காளையாக) வளர்ச்சி அடையக் கூடும் !
--------------------------------------------------------------------------------
கருத்துச் சுருக்கம்:
--------------------------------------------------------------------------------
கைம்முதல் சிறிதேயானாலும், விடாமுயற்சியால்
அதனைப் பெரிதாக்கி, தன்னை இகழ்ந்த ஊர்மக்கள் மெச்ச வாழமுடியும் !
முயற்சிதான் வேண்டும் !
------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்:
------------------------------------------------------------------------------------
உள்ளூர் அவரால் = உள்ளூர் மக்களால் ;
உணர்ந்தாம் முதலெனினும் = மிகச் சிறிய
முதலீடே என்று உணரப்பட்டாலும் ; எள்ளாமை
வேண்டும் = இளக்காரமாகப் பார்க்கலாகாது ; இலங்கிழாய் =
ஒளிமிக்க அணிமணிகளைப் பூண்டவளே !; தள்ளாது = ஒதுக்கிவிடாது ; அழுங்கல் = ஆரவாரம் நிறைந்த ;
முதுபதி = பமையான ஊர் ; அங்காடி = கடைத் தெரு ; மேயும் பழங் கன்று = அலைந்து திரிந்து கிடைத்ததை உண்ணும் கன்று;
ஏறு = பிற்காலத்தில் வீறு மிக்க காளையாக ;
ஆதலும் உண்டு = வளர்ச்சி பெறுவதும் உண்டு.
--------------------------------------------------------------------------------
ஆக்கம் +இடுகை,
வை.வேதரெத்தினம்,
(maraimani2021@gmail.com)
ஆட்சியர்,
”தமிழ்ப் பொய்கை” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு:
2053, கடகம் (ஆடி) 19]
(04-08-2022}
---------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக