புலவர் பலர் யாத்த பூந்தமிழ்ப் பாடல்களின் அணிவகுப்பு !

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 4 ஆகஸ்ட், 2022

மலர் (50) பழமொழி நானூறு - ஆகும் சமயத்தார்க்கு ஆள்வினையும் !

காலம் கனிவானால்  மிகு முயற்சி தேவையில்லை !

{குறிஞ்சி நிலத் தலைவன் ஒருவனுடன்  புலவர் ஒருவர் உரையாடுகிறார்}

 

நெடிதுயர்ந்த  மலைகள் நிறைந்த நாட்டின் தலைவனே ! உனக்கு ஒன்று சொல்கிறேன்; கேளாய் !

 

காலம் கனிவாக இருக்குமேயானால், செல்வத்தை ஈட்டுவதற்கு முனைப்பான முயற்சி மிகுதியும் தேவையில்லை ! காலம் உதவியாக இல்லையேல் ஈட்டிய செல்வத்தைத் தக்க வைத்துக் கொள்ள எத்துணை முயன்றாலும், பயனில்லை; அச்செல்வம் கைவிட்டுப் போயே தீரும் !

 

முயற்சியும் துணையும் இருந்தாலும் கூட, காலம் கனியவில்லையேல், அவரால் ஆகக் கூடியது ஏதும் இல்லை !

 

பாடல் வடிவிலான இந்த உரையாடல், பதினெண்கீழ்க் கணக்கு நூலாகிய பழமொழி நானூற்றில் வருகிறது. இதோ அந்தப் பாடல்:-

 

----------------------------------------------------------------------------------

பாடல் எண்; (127)

----------------------------------------------------------------------------------

 

ஆகும்  சமயத்தார்க்கு  ஆள்வினையும்  வேண்டாவாம்

போகும்  பொறியார்  புரிவும்  பயனின்றே !

ஏகல் மலைநாட !  என்செய்தாங்  கென்பெறினும்,

ஆகாதார்க்கு ஆகுவது இல் !

 

-----------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

--------------------------

ஏகல் = உயர்ந்த ; மலை நாட = மலைகளை உடைய நாட்டிற்கு உரிய தலைவனே ! ஆகும் சமயத்தார்க்கு = காலம் கனிவாக இருக்கும் மனிதர்களுக்கு ; ஆள்வினையும் வேண்டாவாம் = முயற்சி வேண்டியதில்லை; போகும் = காலம் உதவியாக இல்லாத நேரத்து; பொறியார் = மேன்மக்கள் ; புரிவும் = முயற்சிகளால் ; பயனின்றே = பயனில்லை; என் செய்து = என்ன முயற்சி செய்து ; ஆங்கு என் பெறினும் = பிறரது துணையைப் பெற்றாலும்  ; ஆகாதார்க்கு = காலம் துணை செய்யாதவர்களுக்கு ; ஆகுவது = ஆகக் கூடியது ; இல் = ஏதுமில்லை.

 

------------------------------------------------------------------------------------

கருத்துரை:

-------------------

 

காலம் கனிவாக இல்லையேல் எத்துணை முயன்றாலும் செல்வத்தை ஈட்ட முடியாது ! காலம் உதவியாக இல்லையேல் ஈட்டிய செல்வத்தைத் தக்க வைத்துக் கொள்வதும் இயலாது ! காலத்தின் உதவி இல்லாதவரால் ஆகக் கூடியது ஏதுமில்லை ! ஆகாதார்க்கு ஆகுவது இல் என்பது பழமொழி !

 

------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(maraimani2021@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பொய்கை” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, கடகம் (ஆடி) 19)

{04-08-2022}

------------------------------------------------------------------------------------



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக