புலவர் பலர் யாத்த பூந்தமிழ்ப் பாடல்களின் அணிவகுப்பு !

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 22 ஆகஸ்ட், 2022

மலர் (57) தமிழழகன் பாடல் - அப்பா ஒரு பச்சடி வை !


சந்தக் கவிமணி என்று பெயர் பெற்றவர் தமிழழகன். 1929 –ஆம் ஆண்டு பிறந்த இவரது இயற்பெயர் சண்முகசுந்தரம். இவரது தந்தையார் பெயர் வேலு. இவர் தமிழில் புலமை மிக்கவர். திரு.சண்முகசுந்தரம் தனது பத்தாம் அகவையில் தாயாரை இழந்துவிட்டார். எனவே சமையல் உள்பட அனைத்துப் பணிகளையும் தந்தையாரே கவனித்து வந்தார் !

ஒரு நாள், வேலுச் செட்டியார் தன் மகனைப் பார்த்து,” தம்பி ,இன்று என்ன கறி வைக்கலாம் என்று கேட்டார் . தமிழழகன் என்ன மறுமொழி சொல்லி இருப்பார் ? இதோ ! தந்தையின் வினாவுக்கு மகன் சொன்ன விடை ! (தனிப்பாடல்: 191)

---------------------------------------------------------------------------


அப்பா வொரு பச்சடிவை பருப்போடு

தப்பாமற் கத்தரிதான் கூட்டும்வை - அப்பளம்

தானும் பொரிமுருங்கை சாம்பாரும் சேர்த்துவை

நானும் மகிழ்ந் துண்பேன் நன்கு !


-------------------------------------------------------------------------

எளிய வெண்பா தான் ! உங்களுக்கே பொருள் புரியும் ! இருந்தாலும் பாடலின் பொருளையும் தொகுத்துத் தருகிறேன்!

-------------------------------------------------------------------------


அப்பா ! ஒரு பச்சடி வையுங்கள் ! பருப்பும் இருக்கட்டும் ! கத்தரிக்காய்க் கூட்டு வைத்திடுங்கள் ! அப்பளம் பொரித்து வையுங்கள் ! முருங்கைக் காய் சாம்பாரும் வேண்டும் ! இவையெல்லாம் செய்திடுங்கள் ! இன்றைய நண்பகல் உணவை மகிழ்ச்சியாகச் சுவைத்து உண்பேன் !

---------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(maraimani2021@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பொய்கைவலைப்பூ.

[திருவள்ளுவராண்டு:2053, மடங்கல்( ஆவணி) 06]

{22-08-2022}

-------------------------------------------------------------------------

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக