புலவர் பலர் யாத்த பூந்தமிழ்ப் பாடல்களின் அணிவகுப்பு !

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 22 ஆகஸ்ட், 2022

மலர் (56) புதிர்ப் பாடல் - நாகத்தை நாகத்தினாலே !


நாகம் என்னும் சொல்லுக்குத் தான் எத்துணைப் பொருள்கள் !


அந்த நாகத்தைக் கையில் ஏந்தி, நாம் சுவைக்க ,நல்ல பாடல் ஒன்றைத் தந்திருக்கிறார் பெயர் அறிய முடியாத ஒரு புலவர். எத்துணை வல்லமை ! எத்துணைத் தமிழ்ப் புலமை ! தனிப்பாடல் திரட்டு, பாடல்638.

-------------------------------------------------------------------------


நாகத்தை நாகத்தி னாலே மறைத் தொருநங்கை நல்லாள்,

நாகத்தி லேறிமலர் கொய்யும்போ தொருநா கம்வந்து,

நாகத்தை நாகம்பிடித் துக்கொண் டேயொரு நாள்முழுதும்

நாகத்தை நாகம் அணுகக் கண் டேயஞ்சி நடுங்கினளே !


--------------------------------------------------------------------------

பொருள் புரிந்து கொள்ள வசதியாக, பாடலைச் சந்தி பிரித்துத் தந்திருக்கிறேன் ! படித்துப் பாருங்கள் !

--------------------------------------------------------------------------


நாகத்தை நாகத்தினாலே மறைத்து ஒருநங்கை நல்லாள்

நாகத்தில் ஏறி, மலர் கொய்யும் போது, ஒரு நாகம் வந்து,

நாகத்தை நாகம் பிடித்துக்கொண்டே ஒருநாள் முழுதும்,

நாகத்தை நாகம் அணுகக்கண்டே அஞ்சி நடுங்கினளே !


-------------------------------------------------------------------------

நாகம் சொற்பொருள் விளக்கம்:

------------------------------------------

நாகத்தை = நாகபடம் போன்ற தன் அரையை ; நாகத்தினாலே = சேலையினாலே ; நாகத்திலேறி = சுரபுன்னை மரத்தில் ஏறி ; ஒரு நாகம் வந்து = ஒரு நாகப் பாம்பு மரத்தின் கீழே வந்தது ; நாகத்தை நாகம் பிடித்துக் கொண்டு = அவள் சேலையைக் குரங்கு பற்றி இழுத்து ; நாகத்தை நாகம் அணுக = புன்னை மரம் இருக்கும் மலையை யானை அணுக

--------------------------------------------------------------------------

நாகபடம் போன்ற தன் அரையைப் புடவை உடுத்தி மறைத்துக் கொண்டு ஒரு பெண் மலர் கொய்ய மலையடிவாரச் சோலைக்குச் சென்றாள். அங்குள்ள சுரபுன்னை மரத்தில் ஏறி மலர்களைக் கொய்து கொண்டு இருக்கும் போது, மரத்தின் கீழே நாகப் பாம்பு ஒன்று ஊர்ந்து வந்தது. அதைப் பார்த்த ஒரு குரங்கு அவளருகில் வந்து அவளது ஆடையைப் பற்றி இழுத்துத் தன்னைப் பாம்பிடமிருந்து மறைத்துக் கொள்ள முயன்றது.

அப்பொழுது ஒரு யானை மலையோரமாக இருக்கும் அந்தச் சோலையிலுள்ள புன்னை மரம் அருகில் வந்தது. ஏற்கனவே பாம்பு, குரங்கு ஆகியவற்றால் அஞ்சி நடுங்கிய அவள் அந்த யானை புன்னைமரம் அருகில் வரக் கண்டதும் பதற்றமடைந்து மேனியெலாம் நடுநடுங்க அஞ்சினாள் ! அந்த நடுக்கம் ஒரு நாள் முழுதும் அவளைவிட்டு நீங்கவே இல்லை !

-------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

”தமிழ்ப் பொய்கை” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, மடங்கல் (ஆவணி)06]

{22-08-2022}

-----------------------------------------------------------------------

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக