புலவர் பலர் யாத்த பூந்தமிழ்ப் பாடல்களின் அணிவகுப்பு !

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 22 ஆகஸ்ட், 2022

மலர் (55) புதிர்ப் பாடல் - முன்னிரண்டு எழுத்து நீங்கின் !

சாமி ஐயங்கார் என்பவர் எழுதிய ஒரு விடுகதைப் பாடல் ! படித்துப் புதிரை விடுவியுங்கள் பார்க்கலாம் ! (தனிப்பாடல்.132)

------------------------------------------------------------------------

முன்னிரண் டெழுத்து நீங்கின்

.....முத்தியீந் திடுமோ ரூராம் !

பின்னிரண் டெழுத்து நீங்கின்

.....பித்தனார் பத்தர் சொல்சொல்

மன்னிய ஒன்றும் மூன்றும்

.....மயிர்முடி இரண்டும் நான்கும்

உன்னிடிற் கூர்மை யாகும்

.....உரைமினிப் பாண்டி நாட்டூர் !

-----------------------------------------------------------------------

எளிய பாடல்தான் ! இருந்தாலும் சில சந்திகளைப் பிரித்து எழுதினால் தான் உங்களுக்குப் பொருள் விளங்கும்! இதோ சந்தி பிரித்த பாடல்:-

-----------------------------------------------------------------------

முன் இரண்டு எழுத்து நீங்கின்

.....முத்தி ஈந்திடும் ஓர் ஊராம் !

பின் இரண்டு எழுத்து நீங்கின்

.....பித்தனார் பத்தர் சொல்சொல் !

மன்னிய ஒன்றும் மூன்றும்

.....மயிர்முடி, இரண்டும் நான்கும்

உன்னிடில் கூர்மை ஆகும் !

.....உரைம் இனி பாண்டி நாட்டு ஊர் !

-----------------------------------------------------------------------

குறிப்பிட்ட ஒரு சொல்லில் முதலிரண்டு எழுத்துகளை நீக்கினால் பக்தர்களுக்குமுக்தி தரும் ஊரின் பெயராகும். பின் இரண்டு எழுத்துகளை நீக்கினால், சிவனடியார்கள் முணுமுணுக்கும் சொல் ஆகும். முதலெழுத்து மூன்றாம் எழுத்து இரண்டையும் சேர்த்தால் தலைமுடிஎன்பதைக் குறிக்கும் சொல் கிடைக்கும். இரண்டாம் எழுத்தையும் நான்காம் எழுத்தையும் சேர்த்தால் கூர்மைஎன்னும் பொருளைத் தரும் சொல் கிடைக்கும். எங்கே, சொல்லுங்கள் பார்க்கலாம் ! அது பாண்டிய நாட்டில் உள்ள ஒரு ஊரின் பெயர் !

------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(maraimani2021@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பொய்கை” வலைப்பூ,

திருவள்ளுவராண்டு: 2053, மடங்கல் (ஆவணி) 06]

{22-08-2022}

-------------------------------------------------------------------------

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக