புலவர் பலர் யாத்த பூந்தமிழ்ப் பாடல்களின் அணிவகுப்பு !

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 15 டிசம்பர், 2022

மலர் (60) இனியவை நாற்பது - குழவி பிணியின்றி வாழ்தல் இனிது !

கடைச் சங்க காலத்தில் தோன்றிய நூல்களுள் ஒன்று  இனியவை நாற்பது !  மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ் சேந்தனார் என்பவர்  இயற்றிய இந்நூலில் நாற்பது வெண்பாக்கள் உள்ளன.  அறம், பொருள், இன்பம் பற்றிய  இனிய பொருள்களை எடுத்துரைப்பதால், இதற்கு “இனியவை நாற்பது” எனப் பெயர் வழங்கலாயிற்று ! இந்நூலிலிருந்து  ஒரு பாடல் !

-------------------------------------------------------------------------------

பாடல் எண்: (12)

----------------------

குழவி  பிணியின்றி  வாழ்தல்  இனிதே !

கழறும்  அவையஞ்சான்  கல்வி  இனிதே !

மயரிக  ளல்லராய்  மாண்புடையார்ச்  சேரும்

திருவுந்தீர்  வின்றேல்  இனிது !

------------------------------------------------------------------------------

 பொருளுரை:

------------------

குழந்தைகள்   நோய்நொடி  இல்லாது   இருந்தால்,    குடும்ப  வாழ்வு  இனிமை  உடையதாக  இருக்கும் !

அவை மரபு  அறிந்து, அதற்கேற்பத்  தன் கருத்துகளை  அச்சமின்றி  எடுத்து  உரைப்பவனின்  கல்வி  இனியதாகும் !

அறிவு மயக்கம் இல்லாத மாண்புடையவர்களிடம் சேரும் செல்வம், தீர்ந்து போகாமல்  இருத்தல்  இனியதாகும் !

-------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

------------------------------

குழவி = குழந்தை ; பிணியின்றி = நோய் நொடியில்லாமல்;  கழறும் = அவை மரபு அறிந்து சொல்கின்ற ; அவையஞ்சான் = அச்சமின்றி எடுத்துரைப்பவன் ; மயரி = அறிவு மயக்கம் ; அல்லராய் = இல்லாதவராய் ; மாண்புடையார் = பெருந்தகையார் ; திருவும் = செல்வமும் ; தீர்வு இன்றேல் = தீர்ந்து போகாமல் இருப்பின் .

-------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

----------------------

பெற்ற குழந்தை நோய்நொடி இல்லாமல் வாழ்தல், சொற்போருக்கு அஞ்சாக் கல்வி வளம்,  மயக்கம் இல்லாதவராகவும், மாட்சிமை உள்ளவராகவும் விளங்குவாரிடம் சேரும் செல்வம்,  அவரை விட்டுச் செல்லாமல் இருத்தல் ஆகியவை இனியவை !

-------------------------------------------------------------------------------

ஆக்கம் & இடுகை,

வை.வேதரெத்தினம்,

(maraimani2021@gmail.com)

ஆட்சியர்,

”தமிழ்ப் பொய்கை” வலைப்பூ

[திருவள்ளுவராண்டு:2053, நளி (கார்த்திகை)29]

(24-01-2021)

------------------------------------------------------------------------------

 

 


புதன், 16 நவம்பர், 2022

மலர் (59) குறுந்தொகை - வில்லோன் காலன கழலே !

 

மூங்கில் தூர்களும் வாகை மரங்களும் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் காணப்படும் வறண்ட  பாலை நிலத்தில், ஆண்மகன் ஒருவனும் பெண்மகள் ஒருத்தியும், நடந்து செல்கின்றனர்.  அவன்  அணிந்துள்ள வீரக் கழல்களையும், அவள்  அணிந்துள்ள சிலம்பையும்  காணும் வழிப் போக்கர்கள், இருவருக்கும் இன்னும் மணமாகவில்லை என்பதை உணர்ந்து, இவர்கள் யாரோ, இந்தப் பாலை நிலத்தில் கால்கள் வருந்த நடந்து செல்கின்றனரே என்று இரக்கத்துடன் பேசிக் கொள்கின்றனர் ! இந்தக் காட்சியை விவரிக்கும் குறுந்தொகைச் செய்யுளைப் பாருங்கள் !

-----------------------------------------------------

குறுந்தொகைப் பாடல் எண் (07)

-----------------------------------------------------

இயற்றியவர் : பெரும்பதுமனார்

-----------------------------------------------------------

 

வில்லோன் காலன கழலே; தொடியோள்

மெல்லடி மேலவும் சிலம்பே; நல்லோர்

யார்கொல் ? அளியர் தாமே ! ஆரியர்

கயிறாடு பறையிற் கால்பொரக் கலங்கி,

வாகை வெண்ணெற் றொலிக்கும்,

வேய்பயில் அழுவம், முன்னி யோரே !

 

(தலைவனும் தலைவியும் தம் பெற்றோரைத் துறந்து பாலைநிலத்தின்  வழியே நடந்து செல்கையில் அவ்விருவருக்கும் மணம் நடைபெறவில்லை என்பதை எதிரே வந்தவர்கள்,  உணர்ந்து இரங்கிக் கூறியது.)

----------------------------------

அருஞ்சொற்பொருள்:

---------------------------------------

 

வில்லோன் = கைகளில் வில்லை ஏந்தியுள்ள இவன்; காலன = கால்களில்; கழலே = வீரக் கழல்கள் காணப்படுகின்றன; தொடியோள் = தோள்களில் வளையணிந்துள்ள இவள்; மெல்லடி மேலவும் = மென்மையான பாதங்களுக்கு மேல்; சிலம்பே = சிலம்பு அணிந்திருக்கிறாள்; நல்லோர் யார் கொல் ? = இத்தகைய நன்மக்கள் யாரோ? ; அளியர் தாமே = இந்தப் பாலை நிலத்தில் காலடி நோக நடந்து செல்லும் இவர்களைக் காண்கையில் இரக்கம் உண்டாகிறது;

 

ஆரியர் = கழைக் கூத்தர்கள்; கயிறாடு பறையில் = கயிற்றின் மீது நின்றுகொண்டு ஆடுகையில் இசை கூட்டுவதற்காக தட்டப்படும் பறையொலி போல்; கால்பொரக் கலங்கி – மேல் காற்றால் அலைப்புற்று ; வாகை = வாகை மரத்தின்; வெண்ணெற்று = வெள்ளிய நிற நெற்றுகள் கல கலவென ஒலிக்கவும்; வேய் பயில் அழுவம் = மூங்கில் தூர்கள் ஆங்காங்கே காணப்படும் இந்தப் பாலை நிலத்தில்; முன்னியோர் = எதிரில் வருவோர்.

--------------------------------

பாடலின் பொருள்:

----------------------------

குறுக்காகப் பிணைத்த மூங்கில் குச்சிகளில் கட்டிய கயிற்றின் மேல் நின்று ஆரியக்கூத்தர் கழைக் கூத்தாடுவர். அப்பொழுது இசை கூட்டுவதற்காகக் பறை கொட்டப்படும்.  அந்தப் பறையொலியைப் போல மேல்காற்றின் தாக்குதலால் வாகை மரத்தின் நெற்றுகள் கல கலவென ஒலிக்கின்றன ! அவற்றினருகே மூங்கில்  தூர்களின் பருத்த கொம்புகள்   காற்றில் அசைந்து வளைந்து ஆடுகின்றன !

 

இத்தகைய வறண்ட பாலை நிலப் பரப்பில் நடந்து செல்லும் இந்த ஆடவனின்  கைகளில் வில்லும் அம்பும் இருக்கின்றன! அவன் கால்களில் உள்ள வீரக் கழல்கள் அவனுக்குத் திருமணமாகவில்லை என்பதைக் காட்டுகிறது !

 

தோள்களில் வளையணிந்த இப்பெண்மகளின்   மெல்லிய கால்களில் அணிந்துள்ள சிலம்புகள், அவளுக்கும் இன்னும் திருமணமாகவில்லை என்பதைச் சொல்கிறது !

 

இந்த நல்லோர்  யாவரோ ?   வறண்ட இந்தப் பாலை நிலம் இவர்கள் கால்களை  வருத்துமே !  ஐயோ பாவம் ! இன்னும் மணம் புரிந்து கொள்ளாத இவர்களின் நிலை மிகவும் வருந்தத் தக்கது !

----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(maraimani2021@gmail.com)

ஆட்சியர்,

”தமிழ்ப் பொய்கை” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, துலை (ஐப்பசி) 30]

{16-11-2022}

----------------------------------------------------------------------------------------


 

திங்கள், 22 ஆகஸ்ட், 2022

மலர் (58) தமிழழகன் பாடல் - பெட்டிக்குள்ளே சுருளும் !

 

பாம்புக்கும் திரைப்படத்திற்கும் ஒப்புமை ! (தனிப்பாடல்.193)

------------------------------------------------------------------------------------

பாடல்களில் இரட்டுற மொழிதல் என்பது ஒருவகை. இதைச் ‘சிலேடை’ என்றும் சொல்வார்கள். இரட்டுற மொழிதலில்  வல்லவர் காளமேகப் புலவர். சந்தக் கவிமணி தமிழழகனார் படைத்த ஒரு இரட்டுற மொழியும் பாடல் !

------------------------------------------------------------------------------------

 

பெட்டிக்குள் ளேசுருளும்  பின்படமே தான்காட்டும் !

முட்டிக்கொண் டோடுவரே முன்பார்க்க - கொட்டகையில்

ஆடும்   இசையோடும்   ஆடும்போ   தேநகரும்,

பாடுந்   திரைப்படந்தான்   பாம்பு !


-----------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

-----------------------------------------------------------------------------------

 

பெட்டிக்குள்ளே   சுருளும் !  பின், படமே காட்டும் !

முட்டிக் கொண்டு  ஓடுவரே முன் பார்க்க ! – கொட்டகையில்

ஆடும்  இசையோடும் ! ஆடும் போதே நகரும் !

பாடும்  திரைப்படம்தான்,   பாம்பு !


-----------------------------------------------------------------------------------

பாம்பு:

------------

பாம்பாட்டியின் பெட்டிக்குள் சுருண்டு படுத்திருக்கும் ;  பெட்டியைத் திறந்தால் தலையை உயர்த்திப் படம் எடுத்து ஆடும் ; பாம்பாட்டி வேடிக்கை காட்டுகிறார் என்றால் முட்டி மோதிக் கொண்டு மக்கள் விரைந்து ஓடுவார்கள் ;( கொட்டு அகையில் = பெட்டியிலிருந்து வெளியே எடுத்து விடுகையில் ) பாம்பாட்டி தன் பெட்டியிலிருந்து பாம்பை எடுத்து வெளியே  விட்டால், மகுடி இசைக்கேற்ப அது ஆடும் ;  அவ்வாறு ஆடும்போது அசைந்து அசைந்து நகர்ந்து ஆடும்  !

---------------------------------------------------------------------------------- 

திரைப்படம்:

--------------------

திரைப்படம் பெட்டிக்குள் சுருள் வடிவில் இருக்கும் ; அதை எடுத்து படப் பெருக்கியில் (PROJECTOR) இணைத்து இயக்கினால் திரையில் படத்தைக் காட்டும் ; படத்தை முன் வரிசை இருக்கையில் அமர்ந்து பார்ப்பதற்காக மக்கள் முட்டி மோதிக் கொண்டு நுழைவுச் சீட்டு வாங்கிக் கொண்டு ஓடுவார்கள் ; கொட்டகையில் உள்ள திரையில்  படம் ஆடும் (ஓடும்) ; அவ்வாறு ஓடுகையில் இசையும் அதனுடன் சேர்ந்துகொள்ளும் ; படம் ஓடும் போதே அடுத்தடுத்த காட்சிகள் ஒவ்வொன்றாக நகரும்  !

 

ஆகையால் பாம்பும் திரைப்படமும் ஒன்றுக்கொன்று ஒப்புமையானது ஆகும் !

 

-----------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(maraimani2021@gmail.com)

ஆட்சியர்,

"தமிழ்ப் பொய்கை” வலைப்பூ,

 [திருவள்ளுவராண்டு: 2053,மடங்கல் (ஆவணி)06]

{22-08-2022}

 -----------------------------------------------------------------------------------

 

 

மலர் (57) தமிழழகன் பாடல் - அப்பா ஒரு பச்சடி வை !


சந்தக் கவிமணி என்று பெயர் பெற்றவர் தமிழழகன். 1929 –ஆம் ஆண்டு பிறந்த இவரது இயற்பெயர் சண்முகசுந்தரம். இவரது தந்தையார் பெயர் வேலு. இவர் தமிழில் புலமை மிக்கவர். திரு.சண்முகசுந்தரம் தனது பத்தாம் அகவையில் தாயாரை இழந்துவிட்டார். எனவே சமையல் உள்பட அனைத்துப் பணிகளையும் தந்தையாரே கவனித்து வந்தார் !

ஒரு நாள், வேலுச் செட்டியார் தன் மகனைப் பார்த்து,” தம்பி ,இன்று என்ன கறி வைக்கலாம் என்று கேட்டார் . தமிழழகன் என்ன மறுமொழி சொல்லி இருப்பார் ? இதோ ! தந்தையின் வினாவுக்கு மகன் சொன்ன விடை ! (தனிப்பாடல்: 191)

---------------------------------------------------------------------------


அப்பா வொரு பச்சடிவை பருப்போடு

தப்பாமற் கத்தரிதான் கூட்டும்வை - அப்பளம்

தானும் பொரிமுருங்கை சாம்பாரும் சேர்த்துவை

நானும் மகிழ்ந் துண்பேன் நன்கு !


-------------------------------------------------------------------------

எளிய வெண்பா தான் ! உங்களுக்கே பொருள் புரியும் ! இருந்தாலும் பாடலின் பொருளையும் தொகுத்துத் தருகிறேன்!

-------------------------------------------------------------------------


அப்பா ! ஒரு பச்சடி வையுங்கள் ! பருப்பும் இருக்கட்டும் ! கத்தரிக்காய்க் கூட்டு வைத்திடுங்கள் ! அப்பளம் பொரித்து வையுங்கள் ! முருங்கைக் காய் சாம்பாரும் வேண்டும் ! இவையெல்லாம் செய்திடுங்கள் ! இன்றைய நண்பகல் உணவை மகிழ்ச்சியாகச் சுவைத்து உண்பேன் !

---------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(maraimani2021@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பொய்கை” வலைப்பூ.

[திருவள்ளுவராண்டு:2053, மடங்கல்( ஆவணி) 06]

{22-08-2022}

-------------------------------------------------------------------------

 

மலர் (56) புதிர்ப் பாடல் - நாகத்தை நாகத்தினாலே !


நாகம் என்னும் சொல்லுக்குத் தான் எத்துணைப் பொருள்கள் !


அந்த நாகத்தைக் கையில் ஏந்தி, நாம் சுவைக்க, நல்ல பாடல் ஒன்றைத் தந்திருக்கிறார் பெயர் அறிய முடியாத ஒரு புலவர். எத்துணை வல்லமை ! எத்துணைத் தமிழ்ப் புலமை ! தனிப்பாடல் திரட்டு, பாடல்  எண்: 638.

----------------------------------------------------------------------------


நாகத்தை நாகத்தி னாலே மறைத் தொருநங்கை நல்லாள்,

நாகத்தி லேறிமலர் கொய்யும்போ தொருநா கம்வந்து,

நாகத்தை நாகம்பிடித் துக்கொண் டேயொரு நாள்முழுதும்

நாகத்தை நாகம் அணுகக் கண் டேயஞ்சி நடுங்கினளே !


----------------------------------------------------------------------------

பொருள் புரிந்து கொள்ள வசதியாக, பாடலைச் சந்தி பிரித்துத் தந்திருக்கிறேன் ! படித்துப் பாருங்கள் !

-----------------------------------------------------------------------------


நாகத்தை நாகத்தினாலே மறைத்து ஒருநங்கை நல்லாள்

நாகத்தில் ஏறி, மலர் கொய்யும் போது, ஒரு நாகம் வந்து,

நாகத்தை நாகம் பிடித்துக்கொண்டே ஒருநாள் முழுதும்,

நாகத்தை நாகம் அணுகக்கண்டே அஞ்சி நடுங்கினளே !


-----------------------------------------------------------------------------

நாகம் சொற்பொருள் விளக்கம்:

------------------------------------------

நாகத்தை = நாகபடம் போன்ற தன் அரையை ; நாகத்தினாலே = சேலையினாலே ; நாகத்திலேறி = சுரபுன்னை மரத்தில் ஏறி ; ஒரு நாகம் வந்து = ஒரு நாகப் பாம்பு மரத்தின் கீழே வந்தது ; நாகத்தை நாகம் பிடித்துக் கொண்டு = அவள் சேலையைக் குரங்கு பற்றி இழுத்து ; நாகத்தை நாகம் அணுக = புன்னை மரம் இருக்கும் மலையை யானை அணுக

------------------------------------------------------------------------------

நாகபடம் போன்ற தன் அரையைப் புடவை உடுத்தி மறைத்துக் கொண்டு ஒரு பெண் மலர் கொய்ய மலையடிவாரச் சோலைக்குச் சென்றாள். அங்குள்ள சுரபுன்னை மரத்தில் ஏறி மலர்களைக் கொய்து கொண்டு இருக்கும் போது, மரத்தின் கீழே நாகப் பாம்பு ஒன்று ஊர்ந்து வந்தது. அதைப் பார்த்த ஒரு குரங்கு அவளருகில் வந்து அவளது ஆடையைப் பற்றி இழுத்துத் தன்னைப் பாம்பிடமிருந்து மறைத்துக் கொள்ள முயன்றது.

அப்பொழுது ஒரு யானை மலையோரமாக இருக்கும் அந்தச் சோலையிலுள்ள புன்னை மரம் அருகில் வந்தது. ஏற்கனவே பாம்பு, குரங்கு ஆகியவற்றால் அஞ்சி நடுங்கிய அவள் அந்த யானை புன்னைமரம் அருகில் வரக் கண்டதும் பதற்றமடைந்து மேனியெலாம் நடுநடுங்க அஞ்சினாள் ! அந்த நடுக்கம் ஒரு நாள் முழுதும் அவளைவிட்டு நீங்கவே இல்லை !

------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

”தமிழ்ப் பொய்கை” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, மடங்கல் (ஆவணி)06]

{22-08-2022}

-----------------------------------------------------------------------------