புலவர் பலர் யாத்த பூந்தமிழ்ப் பாடல்களின் அணிவகுப்பு !

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 18 ஜூலை, 2022

மலர் (45) சுந்தரக் கவிராயர் பாடல் - மரமது மரத்தில் ஏறி !

மரமதைத் தோளில் வைத்து !

----------------------------------------------------------------------------------------


ஒரு குறுநில மன்னன், குதிரைமீது ஏறி, வேல் தாங்கிய தோளோடு வேட்டைக்குச் செல்கிறான். கானகத்தில்  வேங்கைப் புலி  ஒன்று எதிர்ப்படுகிறது !  அதைத் துரத்திச் சென்று தன்னுடைய வேலினை எறிந்து அதைக் கொல்கிறான்.  அவ்வேட்டை முடித்து அரண்மனையை அடைந்தபோது அங்கிருந்த பெண்கள் அவனுக்கு ஆலத்தி எடுத்து வரவேற்றார்கள்.

 

இந்த நிகழ்ச்சியை, சுந்தரக் கவிராயர் என்னும் தமிழ்ப் புலவர் ஒரு பாடல் மூலம்  நமக்குச் சுவையாகத் தருகிறார் ! இதோ அந்தப் பாடல் :-

---------------------------------------------------------------------------------------


மரமது மரத்தில் ஏறி
..........மரமதைத் தோளில் வைத்து
மரமது மரத்தைக் கண்டு
..........மரத்தினால் மரத்தைக் குத்தி
மரமது வழியே சென்று
..........வளமனைக்(கு) ஏகும்போது
மரமது கண்ட மாதர்

.........மரமுடன் மரமெடுத்தார்!


---------------------------------------------------------------------------------


இப்பாடலுக்குப் பொருள் விளங்குகிறதா?  ஆழ்ந்து படிக்காவிட்டால் விளங்காது ! 

 

மரம் என்ற ஒரு சொல்லில் தான் இப்பாடலின் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது.

 

மரம் என்ற  குறிப்புச்சொல் வழியே இப்பாடலின் பொருளை அறியலாம்.

 

----------------------------------------------------------------------------------------

 

மரம் அது - அந்த மரம் - அதாவது அரச மரம் – அதாவது அரசன் - அரசனானவன்

மரத்தில் ஏறி மா மரத்தில் – அதாவதுமாஎனப்படும் குதிரையில் ஏறி,

மரமதைத் தோளில் வைத்து – மரமதை - அதாவது வேல மரம் – வேலாயுதம் என்னும் வேலினைத் தோளில் வைத்து,

மரமது மரத்தைக் கண்டு – மரமது  - அரசனானவன்  - மரத்தை - வேங்கை மரம் -  அதாவது வேங்கைப் புலியைக் கண்டு,

மரத்தினால் மரத்தைக் குத்தி – மரத்தினால்வேலினால் , மரத்தைக் குத்தி - வேங்கையைக் குத்தி,

மரமது வழியே சென்று – மரமது - அரசன் , வழியே சென்றுதான் வந்த வழியே திரும்பிச் சென்று,

வளமனைக்கு ஏகும்போது - தன் அரண்மனை உள்ள நகர்க்குள் நுழையும்போது,

மரமது கண்ட மாதர் - அரசனைக் கண்ட பெண்கள்,

மரமுடன் மரமெடுத்தார் - ஆல் அத்தி ஆகியவையும் மரங்களே - ஆலுடன் அத்தியும் எடுத்தார் அதாவது ஆல(ர)த்தி எடுத்தார்.

 ----------------------------------------------------------------------------------------


மரம் என்ற ஒரே சொல்லைக்கொண்டு அதன் பல்வேறு பொருள்களைப் பயன்படுத்தி எழுதப்பட்ட செய்யுள் இது.

 

படிப்பவர்களத் தம்  தம் புலமையால் வியக்க வைக்கும் சுந்தரக் கவிராயர் போன்றோர் ஏன் இக்காலத்தில் தோன்றவில்லை ?

 

-----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(maraimani2021@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பொய்கை” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, கடகம் (ஆடி) 02]

{18-07-2022}

----------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக