தலைவிரி கோலமாக அந்தப் பெண்
ஓடி வருகிறாள். சேலை கலைந்திருக்கிறது !
(நாகம் என்னும் ஒற்றைச் சொல்லை வைத்துக் கொண்டு, நல்ல பாடலை நமக்களித்த புலவரின் பெயர் தெரியவில்லை. அவரது பாடலையாவது சுவைத்து மகிழ்வோம் !)
-----------------------------------------------------------------------------------------
தலைவிரி கோலமாக மகள் ஓடி வருகிறாள். அவள் சேலை கலைந்திருக்கிறது. மூச்சு வாங்குகிறது. முகமெல்லாம் வேர்வைத் துளிகள். “ஏனடி ? என்ன நடந்தது ? ஏன் இப்படி ஓடி வருகிறாய் ?” “அம்மா ! சொல்கிறேன் ! கேள் !”
------------------------------------------------------------------------------------------
நாகஞ் சிறந்த மலர்க்காவிற் போய்வரும் நன்னுதலே !
நாகஞ் சரித்திட்ட வாறுசொல்
லீர்நம னார்தமைப்போல்,
நாகந் துரத்திய தாலே
யென்மேனி நடுநடுங்கி
நாகஞ் சரிந்த தடீயெனை
யீன்றருள் நாயகமே !
-----------------------------------------------------------------------------------------
ஒன்றும் புரியவில்லையா ? சரி ! சந்தி பிரித்து எழுதித் தருகிறேன் ! அப்புறமாவது விளங்குகிறதா, பார்க்கலாம் !
----------------------------------------------------------------------------------------
நாகம் சிறந்த மலர்க் காவில் போய்வரும் நல் நுதலே !
நாகம் சரிந்திட்ட ஆறு
சொல்லீர் ! நமனார் தமைப்போல்,
நாகம் துரத்தியதாலே என்
மேனி நடுநடுங்கி
நாகம் சரிந்தது ! அடீ !
எனை ஈன்ற அருள்
நாயகமே !
-----------------------------------------------------------------------------------------
சொற்பொருளுரை:
---------------------------------
நாகம் சிறந்த மலர்க்காவில் = சுரபுன்னை மரங்கள் நிறைந்த பூஞ்சோலைக்கு ; (மலர் கொய்துவர) போய்வரும் = சென்று வரும் ; நல் நுதலே = அழகிய என் பெண்ணே ! ; நாகம் சரிந்திட்ட ஆறு = நீ உடுத்தியிருக்கும் சேலை சரிந்து தளரும் விதத்தில் (அப்படி என்ன நடந்தது) சொல்லீர் = சொல்லடி பெண்ணே !
நாகம் நமனார் தமைப் போல் துரத்தியதாலே = யானை ஒன்று,என்னை எமன் துரத்துவது போல் துரத்தியதாலே ; என் மேனி நடு நடுங்கி = என் உடலெல்லாம் நடு நடுங்கப் (பதறிப் போய் ஓடி வந்தேன்) ; நாகம் சரிந்தது அடீ = அடி என் தாயே, (அதனால்) என் சேலை சரிந்து தளர்ந்திருக்கிறது : எனை ஈன்ற = என்னைப் பெற்ற ; அருள் நாயகமே ! = அருள் மிகுந்த என் தாயே !
------------------------------------------------------------------------------------------
கருத்துரை:
-------------------
பூஞ்சோலைக்கு மலர் கொய்து வரச் சென்ற என் பெண்ணே ! ஏனடி இப்படி ஓடி வருகிறாய் ? உன் சேலை தளர்ந்து சரிந்திருக்கிறது; மேனி நடுங்குகிறது ; அப்படி என்ன நடந்தது அங்கே ?
என்னைப் பெற்றவளே ! அருள்மிகுந்த தாயே ! யானை ஒன்று எமன் போல என்னைத் துரத்தி வந்தது ; அதனால் அச்சமுற்று, மேனி நடுநடுங்க உயிர் பிழைக்க ஓடி வந்தேன். அதனால்தான் என் சேலை தளர்ந்து சரிந்திருக்கிறது ! வேறொன்றுமில்லை என் தாயே !
------------------------------------------------------------------------------------------
நாகம் = சுரபுன்னை மரம், சேலை, யானை என மூன்று பொருள்கள் உள.
-----------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(maraimani2021@gmail.com)
ஆட்சியர்,
”தமிழ்ப் பொய்கை” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு: 2053, கடகம் (ஆடி)
02]
{18-07-2022}
---------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக