புலவர் பலர் யாத்த பூந்தமிழ்ப் பாடல்களின் அணிவகுப்பு !

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 14 ஜூலை, 2022

மலர் (37) தனிப்பாடல் - நாலெழுத்தாம் ஏமம் மத்தி !

நான்கெழுத்துச் சொல்லை வைத்து  ஒரு புதிர் !

தமிழில்  ஈடுபாடு  மிக்க  அறிஞர் பெருமக்கள் பாடல் வாயிலாகவே விடுகதைகள்  சொல்வதில் வல்லவர்களாகத் திகழ்ந்தனர். அப்படிப்பட்ட   புலவர் ஒருவர் சொன்ன விடுகதை இதோ ! இந்தப் புலவரைப் பற்றிய வரலாறும்  கிடைத்தில !

-----------------------------------------------------------------------------------

நாலெழுத்தா  மேமத்தி  னண்ணுமுத   னீக்கிடினோ

வேல்விழியா   மிரண்டுவிடி   னேநிசியாம்  -  காற்றலையும்

வல்லபுலி   முன்னிரண்டும்   வாளியா   நான்கி  லொன்று

நல்லமதி  யீதெனவே   நாட்டு.

-----------------------------------------------------------------------------------

சந்தி பிரிக்காமல் எழுதிய நிலையில் பாடலின் பொருளை விளங்கிக் கொள்வது அத்துணை எளிதன்று ! எனவே உங்களுக்காக இப்பாடலைச் சந்தி பிரித்துத் தருகிறேன் !

-----------------------------------------------------------------------------------

நாலெழுத்தாம் , ஏமம்மத்தி  நண்ணும்  முதல்  நீக்கிடினோ,

வேல்விழியாம்,   இரண்டு விடின்  நிசியாம்கால் தலையும்

வல்ல புலிமுன் இரண்டும்  வாளியாம்நான்கில்  ஒன்று

நல்ல மதிஈது எனவே நாட்டு !

-----------------------------------------------------------------------------------

கருத்துரை:-

-------------------

நான்கு எழுத்து உள்ள ஒரு சொல் !  இச்சொல்லில் உள்ள முதல் எழுத்தை நீக்கி விட்டால் மங்கைஎன்று பொருள் படும் .  முதல் இரண்டு எழுத்துகளை நீக்கிவிட்டால் இரவுஎன்று பொருள் ஆகும்;  முதலெழுத்தும் கடைசி எழுத்தும் சேர்ந்தால்  புலிஎன்று பொருள்;  முதல் எழுத்தும் இரண்டாவது எழுத்தும் சேர்ந்தால் அம்புஎன்று பொருள் கிடைக்கும்;  நான்கு எழுத்துகளில் ஒன்றை மட்டும் கருதினோமானால்   ஒரு மாதத்தின் பெயர் வரும்; இஃது என்ன சொல் என்பதைச் சொல்லுங்களேன் !

-----------------------------------------------------------------------------------

அருஞ்சொற் பொருள்:-

-------------------------------------

நாலெழுத்தாம் = நான்கு எழுத்துகள் உள்ள;  ஏமத்தில்  = இச்சொல்லில் ; நண்ணும் முதல் நீக்கிடினோ = அமைந்துள்ள முதல் எழுத்தை நீக்கிவிட்டால் ; வேல்விழியாம் = வேல்விழி என்று சொல்லப்படுகிற மங்கைஎன்பதாகும்;  இரண்டு விடின் =முதல் இரண்டு எழுத்துகளை விட்டுவிட்டால்;  நிசியாம் = நிசி என்று சொல்லப்படும்  இரவு என்பதைக் குறிக்கும்;  கால் தலையும் வல்ல புலி = இச்சொல்லில் காலாகவும் தலையாகவும் இருக்கிற முதலெழுத்தையும் கடைசி எழுத்தையும் சேர்த்தால்  வருகின்ற சொல் புலியைக் குறிக்கும்

முன் இரண்டும் வாளியாம் = முதலிரண்டு எழுத்துகளைச் சேர்த்தால்  வரும் வாளிஎன்னும் சொல்லைக் குறிக்கும் (வாளி = அம்பு); நான்கில் ஒன்று = இந்த நான்கு எழுத்துகளில் ஒன்று ; நல்லமதி =  நல்ல மாதங்களில் ஒன்று ! ஈது எனவே நாட்டு = இது தான் அந்த விடை என எனக்குச் சொல்வாயாக !

-----------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(maraimani2021@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பொய்கை” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, ஆடவை (ஆனி) 30]

{14-07-2022}

-----------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக