தேன் போல இனிய மொழி பேசுபவர் ! யார் ?
வீரராகவ முதலியார் பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவராவார். தொண்டை நாட்டில் உள்ள பொன்விளைந்த களத்தூரைச் சேர்ந்த வடுகநாத முதலியாருக்கு மகனாக பிறந்த வீரராகவ முதலியார், இளமையில் அந்நாட்டின் தலைநகரான காஞ்சிமாநகர் சென்று அங்கு தமிழ் கற்றார்.
அருணகிரிநாதர், வில்லிபுத்தூரார் காலத்தில் வாழ்ந்த இவர் வசிப்பிடம் பொற்களந்தை என்பர். பார்வை இல்லாத காரணத்தால் இவர் அந்தகக் கவி வீரராகவ முதலியார் என்றும் அழைக்கப்படுவர். எட்டாயிரங் கோடி யெழுதாது தன் மனத் தெழுதிப் படித்த விரகர் என்று இவரின் ஞாபகத்தில் வைத்து செய்யுள் பாடும் திறமையைப் புகழ்வர்.
இவர் பல தனி நிலைச் செய்யுள்களையும் கழுக்குன்றப் புராணம், கழுக்குன்ற மாலை, சந்திரவாணன் கோவை, திருவாரூர் உலா, சேயூர்க்கலம்பகம், சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ், கயத்தாற்றரசன் உலா முதலிய பிரபந்தங்களை இயற்றியுள்ளார் !
வீரராகவ முதலியார் பிறவியிலேயே கண் பார்வை இழந்தவர். அதனால் “அந்தகக் கவி” என்னும் அடைமொழி பெற்றவர் !
அவர் வாழ்ந்த ஊரில் திருவேங்கடம், கண்ணுக்கினியான் என இருவர் வாழ்ந்து வந்தனர். இவர்களுள் திருவேங்கடம் இன்மொழியாளர்; கண்ணுக்கினியான் சுடுமொழியாளர். தமிழ்ப் புலவர்களை நயந்து பாராட்டுவதில் இருவரும் தத்தம் இயல்பான குணங்களுக்கு ஏற்ப நடந்து வரலாயினர் !
அவர்களைப் பற்றி வீரராகவர் இயற்றிய ஒரு பாடல், இதோ உங்களுக்காக !
தேன்பொழிந்த வாயான் திருவேங்கடத் துடனே
ஏன்பிறந்தான் கண்ணுக் கினியானே – வான்சிறந்த
சீதேவியாருடனே செய்ய திருப்பாற் கடலில்
மூதேவியேன் பிறந்தாள் முன் !
--------------------------------------------------------------------------------------
பாடலின் பொருள்:
-------------------------
தேன் போல இனிய மொழி பேசுபவர்
அன்பர் ”திருவேங்கடம்.” ஆனால் இனிமை என்பதையே அறியாத, சுடுமொழியாளர் ’கண்ணுக்கினியான்”, அவருக்குத் தமையனாராக ஏன்
பிறந்தார் ? எப்படியென்றால், வானவர் போற்றும் திருமகளான சீதேவியுடன் அவளுக்கு முன் அவளது தமக்கையான மூதேவி
திருப்பாற்கடலில் பிறக்கவில்லையா ?
அப்படித்தான் இவனும் பிறந்திருக்கிறான் !
--------------------------------------------------------------------------------------
(maraimanai2021@gmail.com)
ஆட்சியர்,
”தமிழ்ப் பொய்கை” வலைப்பூ,
திருவள்ளுவராண்டு: 2053, ஆடவை (ஆனி) 05]
{19-06-2022}
-------------------------------------------------------------------------------------
மூதேவி, சீதேவி |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக