புலவர் பலர் யாத்த பூந்தமிழ்ப் பாடல்களின் அணிவகுப்பு !

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 21 ஜூன், 2022

மலர் (18) வீரராகவர் பாடல் - இல்லெனுஞ் சொல்லறியாத !

ஒரு வாய்க்கே சோறு கிடைக்கவில்லை ! நால்வாய்க்கு எப்படி அளிப்பேன் ?

 

------------------------------------------------------------------------------

 

இல்லை என்னும் சொல்லை வாயிலிருந்து உதிர்த்து அறியாத வள்ளல் ஒருவன் (இராமன்) சீகை என்னும் சீர்காழியில் வாழ்ந்து வந்தான். அவனைக் காண பாணனாகிய இந்தப் புலவர் சென்றார். இராமனிடம் “யான் யாழ் மீட்டும் பாணன்” என்று சொல்லிப் பல்லைக் காட்டி நெளிந்து குழைந்து  இரந்தார் !

 

 

சில நாள்களுக்குப் பசியாற உண்பதற்கு ஒரு சில பொதிகள் அரிசியும் உடுத்துவதற்குத் துணிமணிகளும் அவன் கொடுத்து அனுப்புவான் என்று அவர் எதிர்பார்த்தார். அவனோ அவற்றைக் கொடுக்காமல் தொங்குகின்ற தும்பிக்கையுடைய  (நால்வாய்) யானை ஒன்றைக் கொடுத்தான் !

 

 

திகைத்துப் போனார் புலவர்.  பசியாற உண்பதற்கு எனது ஒருவாய்க்குச் சோற்றுக்கே வழியில்லாத   நான் (நாலு வாய்க்கு - சிலேடைப் பொருள்நால் வாய் = தொங்கு வாய், அதாவது யானை) நால்வாய்க்கு இரை தர என்ன செய்வேன் ?  கொடை என்ற பெயரில் யானையைத் தந்து கொல்கிறானே இந்த வள்ளல் - என்று பாடுகிறார் புலவர் !


------------------------------------------------------------------------------

இதோ பாருங்கள் பாடலை !

------------------------------------------------------------------------------

 

இல்லெனுஞ் சொல்லறியாத சீகையில் வாழ்,

……..தன்னைப்போய்  யாழ்ப்பாணன் யான்

 

பல்லைவிரித் திரந்தக்கால் வெண்சோறும்,

……..பழந்தூசும் பாலியாமல்

 

கொல்ல நினைந்தே தனது நால்வாயைப்,

………பரிசென்று கொடுத்தான், பார்க்குள்

 

தொல்லையென தொருவாய்க்கு நால்வாய்க்கு,

……… இரையெங்கே துரப்புவேனே!

 

------------------------------------------------------------------------------

 சொற்பொருள்:

 -------------------

இல்” எனுஞ் சொல் அறியாத = தன் வாயிலிருந்து “இல்லை” என்னும் சொல்லை உதிர்த்து அறியாத ;  சீகையில் வாழ் = சீகை என்னும் சீர்காழியில் வாழ்கின்ற; தன்னைப்போய் = வள்ளலாகிய இராமன் என்பவரிடம் சென்று; யாழ்ப்பாணன் யான் = யாழ் மீட்டுகின்ற பாணனாகிய நான்;  பல்லை விரித்து இரந்தக்கால் = பற்களைக் காட்டி நெளிந்து குழைந்து உதவி கோரியபோது; 

 

வெண்சோறும் பழந்தூசும் பாலியாமல் = சில நாள்கள் வயிறார உண்பதற்கு சில பொதிகள் அரிசியும் துணிமணிகளும் தராமல்; பார்க்குள் தொல்லை து  ருவாய்க்கு = இந்தப் பூமியில் என் ஒரு வாய்க்கே உணவின்றி அல்லற்பட்டு வருகையில்; நால்வாய்க்கு = எனக்குப் பரிசாக இந்த வள்ளல் கொடுத்திருக்கும் நால்வாய் எனப்படும் யானைக்கு; இரையெங்கே துரப்புவேனே = இரை அளிப்பதற்கு  நான் என் செய்வேன் ?

 ------------------------------------------------------------------------------

பொருளுரை:

 -----------------


சீர்காழியில் வாழ்ந்து வந்த இராமன் என்பார் வள்ளல் தன்மை மிக்கவர். அவரிடம் யாழ் மீட்டும் புலவர் (பாணன்) ஒருவர் சென்று தனக்கு உதவி செய்யக் கோரினார்.  அந்த வள்ளல் யானை ஒன்றை புலவருக்குக் கொடுத்தார். தன் ஒரு வயிற்றுக்கே சோறு கிடைக்காத போது யானையைக் கட்டித் தீனி போடுவது எப்படி என்று அவர் கலங்குகிறார் !

 -----------------------------------------------------------------------------

கருத்துரை:

 ---------------


வள்ளலின் கொடைத் திறத்தை அந்தகக் கவி வீரராகவர் நகைச் சுவை மிக்க பாடலாக வெளிப்படுத்தியுள்ளார் !

 

-----------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(maraimani2021@gmail.com)

ஆட்சியர்,

"தமிழ்ப் பொய்கை” வலைப்பூ,

[திருவளுவராண்டு, 2053, ஆடவை (ஆனி) 07]

{21-06-2022}

------------------------------------------------------------------------------

நால்வாய்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக