புலவர் பலர் யாத்த பூந்தமிழ்ப் பாடல்களின் அணிவகுப்பு !

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 14 ஜூன், 2022

மலர் (15) ஔவையார் பாடல் - எட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே !

ஒரு காலடி, நாலிலைப் பந்தலடி ! ஆரையடா சொன்னாய் அடா !

 -----------------------------------------------------------------------------------

கம்பர் ஒருமுறை ஔவையாரிடம் ஒரு விடுகதை சொல்கிறேன். புதிரை விடுவியுங்கள் பார்க்கலாம் என்று கூறி 'ஆரை' என்னும் கீரையைக் குறிப்பதாகப் பொருளை உள்ளடக்கி கீழ்க் கண்டவாறு சொன்னார்:-

-----------------------------------------------------------------------------------

பாடல்

-----------------------------------------------------------------------------------

'ஒரு காலடி, நாலிலைப் பந்தலடி'

ஒரு கால் அடி நாலிலைப் பந்தல் அடி

------------------------------------------------------------------------------------

இதை இவ்வாறு பிரித்து அமைத்துப் பொருள் காண்க !

அடி ஒரு கால்; அடி; நாலிலைப் பந்தல்.

(பந்தல்) அடி(யில்)  ஒரு கால்; அடி(போன்ற) நாலிலைகள் உடைய பந்தல்

------------------------------------------------------------------------------------

தாங்கி நிற்கும் வகையில் அடியில் (கீழே)  ஒரு கால் (தூண்) இருக்கும் ! மேலே கால் அடியைப் போல வடிவம் கொண்ட நான்கு இலைகள் உடைய பந்தல் இருக்கும் (அது என்ன ?)

------------------------------------------------------------------------------------

 சொற்பொருள்;-

--------------------------

ஒரு காலடி = ஒரு கால் இருக்குமடி; நாலிலை = நான்கு இலைகள் உடைய ; பந்தலடி = பந்தல் போன்று இருக்குமடி! (அது என்ன?)

இதில் வரும் 'அடி' என்னும் சொல் ஔவையாரை மதிப்புக் குறைவாக விளிக்கும் வகையில் இடக்கராக வைத்துப் புதிரைக் கூறினார்.

ஔவையாரிடமா கம்பரின் இடக்கு செல்லுபடியாகும்? ஔவையார் உடனே பாடினார்:-

-----------------------------------------------------------------------------------

பாடல்

-----------------------------------------------------------------------------------

எட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே,

மட்டில் பெரியம்மை வாகனமே, - முட்டமேல்

கூரையில்லா வீடே, குலராமன் தூதுவனே,

ஆரையடா சொன்னாயடா!

-----------------------------------------------------------------------------------

பொருள்:- (01)

----------------------

அடேய் ! அவலட்சணம் பிடித்தவனே ! எருமைக் கடாவே ! கழுதையே !; குட்டி சுவரே !; குரங்கே !; நீ சொன்னது ஆரைக் கீரையைத் தானடா !

----------------------------------------------------------------------------------

சொற்பொருள்:-

--------------------------

எட்டு = '' : கால் = '' ; எட்டேகால் லட்சணம் அவலட்சணம்; எமன் ஏறும் பரி = எருமைக்கடா; மட்டில் பெரியம்மை - மூத்ததேவி என்னும் மூதேவி;  வாகனம் கழுதை;  மேல் கூரையில்லா வீடு குட்டிச்சுவர்; குலராமன் தூதுவன் குரங்கு

------------------------------------------------------------------------------------

பொருள் :-(02)

---------------------

விரைந்து நடக்கும் காலழகா ! எம் குலத்தவனே ! வளரும் செல்வமே ! தேவலோகம் போன்றவனே ! உயர்குல வேந்தன் இராமபிரானின் கதையை காவியமாக்கிய கவிஞனே ! ஆரைக் கீரையை உட் பொருளாக வைத்து நீ விடுகதையைச் சொன்னாய் ! ஆனால் என்னை நீ வெல்ல முடியாது !

------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:-

--------------------------

எட்டு + கால் = எட்டுக்கால் - எட்டேகால் ; எட்டு = கால்களை எட்டிப் போட்டு நடக்கும், லட்சணமே = அழகனே ! (விரைவாக நடக்கும் வலிமை பொருந்திய கால்களை உடைய அழகனே !) எமன் = எம்முடைவன் (எம் குலத்தவனே !); ஏறும் பரியே = வளரும் செல்வமே !, முட்ட மேல் கூரை இல்லா வீடே = தலையில் முட்டும் அளவுக்குத் தாழ்வான மேற்கூரை இல்லாத ; வீடே (அதாவது தேவலோகம் போன்றவனே !)  குலராமன் = உயர்குலத்தில் பிறந்த வேந்தனான இராமபிரானின்; தூதுவனே = இராமாயணம் என்னும் இராம காதையை இயற்றி, இராமனின் புகழ் பரப்பும் தூதனே ! ஆரை = ஆரைக் கீரையை; அடா = உள்ளடக்கி, சொன்னாய் = என்னிடம் விடுகதையைச் சொன்னாய் ; அடா = அடாது.

-----------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(maraimani2021@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பொய்கை” வலைப்பூ,

(திருவள்ளுவராண்டு: 2053, விடை (வைகாசி) 31]

{14-06-2022}

-----------------------------------------------------------------------------------

ஆரைக்கீரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக