புலவர் பலர் யாத்த பூந்தமிழ்ப் பாடல்களின் அணிவகுப்பு !

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 12 ஜூன், 2022

மலர் (14) ஔவையார் பாடல் - வான் குருவியின் கூடு, வல்லரக்கு !

இந்த உலகத்தில்  வல்லவர் யார் ?  எளியவர் யார் ?

------------------------------------------------------------------------------------

[ஔவையார் அருளிய தனிப்பாடல்]

-----------------------------------------------------------------------------------


வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கரையான்

தேன்சிலம்பி யாவர்க்குஞ் செய்யரிதால் - யாம்பெரிதும்

வல்லோமே யென்று வலிமைசொல வேண்டாம்காண்

எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது.


------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்

------------------------------------------------------------------------------------


வான் குருவியின் கூடு வல் அரக்கு தொல் கரையான்

தேன் சிலம்பி யாவர்க்கும் செய் அரிதால்  - யாம் பெரிதும்

வல்லோமே என்று வலிமை சொல வேண்டாம் காண் !

எல்லார்க்கும் ஒவ்வொன்று எளிது !


------------------------------------------------------------------------------------

பொருளுரை:

---------------------


வான் குருவி எனப்படும் தூக்கணாங் குருவிக்கூடு, அரக்கு எனப் படும் வலிமையான இயற்கைப் பசை,   தேன்அடை,  சிந்தனைச் சிக்கலை நம்முள் உருவாக்கிவிடும் சிலந்தி வலை இவற்றை மேலோட்டமாகப் பார்த்தால் புல்லிய  புலனங்களே  !  ஆனால்  இந்த  அறிவியல் உலகில் எந்த மேதையாலும் இவற்றை உருவாக்க இயலுமா?

 

ஒவ்வொருவரிடமும் ஒரு சிறப்பு இருக்கிறது; சாதாரண பறவையான வான் குருவி கட்டுகின்ற (தூக்கணாங் குருவிக்) கூட்டை இந்தக் கணினி யுகத்தில் வேறு எவராலும் கட்டித் தொங்கவிட்டு அதில் அக் குருவிகளைக் குடி வைக்க முடியுமா? முடியவே முடியாது !

 

அதாவது இந்த உலகத்தில் ஆற்றிவு படைத்த மனிதர்களாலும் செய்ய முடியாத செயல்களும்  இருக்கவே  செய்கின்றன  என்பதை இடித்துக் காட்டிவாழ்வில் பிற மனிதர்களிடத்தும், பிற  உயிர்களிடத்தும் நாம் சமத்துவ   உணர்வு கொண்டிருக்க  வேண்டும்  என்பதை  எடுத்துக் காட்டுவதே இப்பாடலின் நோக்கம் !

 

’யாம் பெரிய வல்லாளன் என்பதாய் எண்ணம் கொண்டு பிறரைத் தாழ்மையாக நினைத்து விடக் கூடாதுஎன்ற எச்சரிக்கையை இப்பாடல் மூலம் நமக்கு அளிக்கிறார் ஔவையார் !

------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

---------------------------------------

 

வான் குருவி = தூக்கணாங் குருவி ; வல் அரக்கு = ஒரு வகைக் குளவி யால் சேகரித்து  உருவாக்கப்படும் அரக்கு ;  தொல் கரையான் = பழங் காலம் முதல் இருந்து வரும் கரையான் உருவாக்குகின்ற மண் புற்று ; தேன் =  தேனீக்கள் பூக்களிலிருந்து துளித் துளியாகத் தேனைச்  சேகரித்து சேர்த்து வைக்கும் அறுகோண வடிவ சிற்றறைகள் கொண்ட தேனடைகள்


சிலம்பி = சிலந்தியின் வலை ; (ஆகியவை) யாவர்க்கும் = எந்த மனிதருக்கும் ; செய்யரிதால் = செய்ய முடியாதவை ; யாம் பெரிதும் வல்லோம் = நான் எதையும் செய்ய வல்லவன் ; என்று வலிமை சொல வேண்டாம் = என்று ஆணவம் கொள்ள வேண்டாம் ; காண் = அசைச்சொல் (இதற்கு இவ்விடத்தில் பொருள் ஏதும் இல்லை) ;


------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(maraimani2021@gmail.com))

ஆட்சியர்,

தமிழ்ப் பொய்கை” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, விடை (வைகாசி) 29]

{12-06-2022}

-------------------------------------------------------------------------------------


வான்குருவிக் கூடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக