எல்லோருக்கும் ஒரு விலையுண்டு
!
பதினெண் கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்றான ”பழமொழி” என்பது முன்றுரை அரையனார் என்பவர்
இயற்றிய நானூறு வெண்பாக்களால் ஆகிய ஒரு இலக்கியம். ஒவ்வொரு வெண்பாவிலும்
ஈற்றடியில் ஒரு பழமொழியை அமைத்து இவ்விலக்கியத்தை அவர் படைத்துள்ளார் !
----------------------------------------------------------------------------------
பாடல். 32.
----------------------------------------------------------------------------------
தெருளா தொழுகும் திறனிலா தாரைப்
பொருளா லறுத்தல் பொருளே – பொருள்கொடுப்ப,
பாணித்து நிற்கிற்பார் யாருளரோ? வேற்குத்தின்
காணியின் குத்தே வலிது.
----------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்.
----------------------------------------------------------------------------------
தெருளாது ஒழுகும் திறன் இலாதாரைப்
பொருளால் அறுத்தல் பொருளே – பொருள் கொடுப்ப,
பாணித்து நிற்கிற்பார் யார் உளரோ? வேல் குத்தின்
காணியின் குத்தே வலிது.
----------------------------------------------------------------------------------
பொருளுரை:
----------------------
தனது தகுதியை உணராது ஆணவத்துடன் செயல்படும் திறமையற்ற பகைவரை,
பொருள் (பணம்) கொண்டு அழித்தலே சரியான
செயலாகும்.. (அந்த எதிரியை ஒழிக்கும் நோக்கில் கைக்கூலியாக) தேவையான (பணத்தை)
பொருளைக் கொடுத்தால் பகைமையை விட்டொழிக்கத் தயங்குபவர் யாராவது இருக்கிறார்களா
என்ன ? கூரிய வேலைக் கொண்டு அழிப்பதைக் காட்டிலும்
பணத்தால் அடித்து பகைவரை வெல்வதே வலிமையானது !
----------------------------------------------------------------------------------
பழமொழி சொல்லும் பாடம்: எல்லோருக்கும் ஒரு விலையுண்டு, பணம் எதையும் சாதிக்க வல்லது; ஆகையால் செல்வத்தைத் தக்க
முறையில் பயன்படுத்தி எதிரி நமக்கு
இடையூறாக இருப்பதை நீக்கிட வேண்டும்.
----------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்:
-----------------------------------
தெருளாது = தனது தகுதியை உணராது; ஒழுகும் = நடந்துகொள்ளும்; திறன் இலாதாரை = திறமையற்ற பகைவரை; பொருளால் = பணம் கொடுத்து; அறுத்தல் =
இல்லாமல் செய்தல் (அழித்தல்); பொருளே = சரியான செயலாகும். பொருள்
கொடுப்ப = பணம் கொடுத்தால்; பாணித்து = தனது செயலிலிருந்து
பின்வாங்காமல்; நிற்கிற்பார் = உறுதியாக நிற்பவர் ;
யார் உளரோ = யார் இருக்கிறார்; வேல் குத்தின் = வேல் கொண்டு குத்தி அழிப்பதைவிட ; காணியின் குத்தே = காணிக்கையாகக் பணம்
கொடுத்து அவரைப் பணியவைப்பதே ; வலிது = வலிமை மிகுந்ததாகும் !
-----------------------------------------------------------------------------------
செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில். (குறள்: 759)
திருவள்ளுவரும் முன்றுரை அரையனாரின் கருத்தை வலியுறுத்துவதை மேற்கண்ட
குறள் மூலம் அறியலாம்.
----------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(maraimani2021@gmail.com)
ஆட்சியர்,
“தமிழ்ப் பொய்கை” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு: 2053, கடகம் (ஆடி)
19]
[04-08-2022}
-----------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக