புலவர் பலர் யாத்த பூந்தமிழ்ப் பாடல்களின் அணிவகுப்பு !

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 1 ஜூலை, 2022

மலர் (26) வீரராகவர் பாடல் - வீரஞ் சொரிகின்ற பிள்ளாய் !

உனக்குத் திருமணம் செய்விக்கப் பெண் கிடைப்பதில்லையே !

 

கண்பார்வையை இழந்திருந்தாலும் தமிழ்க் கல்வியைக் கசடறக் கற்று ஊர் புகழும் கவிஞராகத் திகழ்ந்தவர் அந்தகக் கவி வீரராகவ முதலியார்”. பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர் பிறந்த ஊர் தொண்டை மண்டலத்தில் காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள பொன்விளைந்த களத்தூர் என்பதாகும் !

 

பல அரிய பாடல்களைப் பாடியுள்ள இவர் பத்துக்கும் மேற்பட்ட பாடல் தொகுதிகளை இயற்றியுள்ளார். அவர்து பாடல் தொகுதியிலிருந்து ஒரு பாடல் உங்களுக்காக :--

 

 -----------------------------------------------------------------------------------

 

 வீரஞ்சொரி கின்றபிள்ளா யுனக்குப் பெண்வேண்டு மென்றால்

ஆருங்கொடா ருங்களப்பன் கபாலி யம்மான் திருடன்

ஊருஞ்செங் காடுநின்றன் முகம்யானை யுனக்கிளையோன்

பேருங்கடம்ப நின்றாய்நீலி நிற்கும் பெருவயிறே.

 

 ----------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

-----------------------------------------------------------------------------------------

 

வீரம் சொரிகின்ற பிள்ளாய் உனக்குப் பெண் வேண்டும் என்றால்

ஆரும் கொடார் ! உங்கள் அப்பன் கபாலி ! அம்மான் திருடன் !

ஊரும் செங்காடு ! நின் தன் முகம் யானை ! உனக்கு இளையோன்

பேரும் கடம்பன் ! நின் தாய் நீலி ! நிற்கும் பெரு வயிறே !

 

------------------------------------------------------------------------------------------

பொருளுரை:

----------------------

 

வீரச் செயல்கள் பல புரிகின்ற பிள்ளையே ! உனக்குத் திருமணம் செய்விக்க வேண்டுமென்றால் யாரும் பெண் கொடுக்க முன்வருவதில்லையே ! காரணம் என்ன தெரியுமா ? உன் தந்தையோ கையில் மண்டையோட்டை ஏந்திக் கொண்டிருக்கும் கபாலியாக இருக்கிறான் ! அவன் குடியிருக்கும் இடமோ  (செங்காடு) சுடுகாடு ! உன் அம்மானோ (மாமன்) வீடு வீடாகச் சென்று வெண்ணெய் திருடித் தின்று வருபவன்  ! உன் தம்பி பெயரோ  (கடம்பன்) முரடன் ! உன் தாய் (நீலி) கருப்பி ! உனக்குப் பானை வயிறு !  யானைமுகம் !  யாரப்பா உனக்குப் பெண் தருவார்கள் ?

 

-----------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்;

--------------------------------------

 

ஆரும் = யாரும் ; கொடார் = கொடுக்கமாட்டார் ; கபாலி = கையில் மண்டையோடு வைத்திருப்பவன் ; அம்மான் = மாமன் செங்காடு =  சுடுகாடு ; கடம்பன் = முரடன் ; நீலி = கறுப்பு நிறத்தவள் ; நிற்கும் = நினக்கும் ;

 

-----------------------------------------------------------------------------------------

பின்குறிப்பு:

--------------------

 

பிள்ளையாரை இகழ்வது போல் புகழும் பாடல். இது வஞ்சப் புகழ்ச்சி எனப்படும் !

 -----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(maraimani2021@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பொய்கை” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, ஆடவை (ஆனி) 17]

{01-07-2022}

---------------------------------------------------------------------------------------- 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக