புலவர் பலர் யாத்த பூந்தமிழ்ப் பாடல்களின் அணிவகுப்பு !

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 1 ஜூலை, 2022

மலர் (25) வீரராகவர் பாடல் - மாடேறு தாளும் மதியேறு சென்னியும் !

உழவனின் நெல் அரி மீது சிப்பிகள் முத்து ஈனும் திருக்கழுக்குன்றம் !

 

அந்தகக் கவி வீரராகவ முதலியார் பல்வேறு பாடல் தொகுதிகளைப் படைத்துள்ளார். கழுக்குன்றப்புராணம், கழுக்குன்றமாலை, சந்திரவாணன் கோவை, திருவாரூர் உலா, சேயூர்க் கலம்பகம், சேயூர் முருகன்பிள்ளைத் தமிழ், கயத்தாற்றரசன் உலா ஆகியவை அவற்றுள் அடங்கும் !

 

 அவர் இயற்றியுள்ள கழுக்குன்ற மாலையிலிருந்து ஒரு பாடல்:

 

 -----------------------------------------------------------------------------------------

 

 மாடேறு தாளு மதியேறு சென்னியு மாமறையோன்

ஓடேறு கையு முடையார் தமக்கிட மூருழவர்

சூடேறு சங்கஞ் சொரிமுத்தை முட்டையென் றேகமலக்

காடேறு மன்னஞ் சிறகா லணைக்குங் கழுக்குன்றமே !

 

------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

--------------------------

மாடு ஏறு  தாளும் = தனது ஊர்தியான காளை மீது ஏறி அமர்ந்திருக்கும் கால்களையும்;

 

மதி ஏறு சென்னியும் = பிறையைச் சூடி இருக்கும் தலையையும்,

 

மாமறையோன் ஓடேறு கையு முடையார் =

மண்டையோட்டை ஏந்தியிருக்கும் கைகளையும் உடையவர் ஆகிய

 

தமக்கு = சிவபெருமான்,

 

ஊர் இடம் = எழுந்தருளியிருக்கும் ஊர்,

 

கழுக்குன்றமே = திருக்கழுக்குன்றமாகும்.

 

உழவர் சூடு ஏறு = உழவர் அறுவடை செய்து வைத்த  நெல்

அரிகள் மீது ஏறி;

 

சங்கம் சொரி முத்தை = சிப்பிகள் ஈன்ற  முத்தை;

 

முட்டை என்றே = தனது முட்டை என்று கருதி;

 

கமலக் காடு ஏறு = தாமரைகள் காடாக மண்டித்  திகழும்

தடாகத்தில் வாழும்;

 

அன்னம் சிறகால் அணைக்குமே = அன்னப் பறவை தனது

சிறகால் அணைத்துக் கொள்கிறது !

 

-----------------------------------------------------------------------------------------

பொருளுரை:

-----------------------

 

காளை மீது அமர்ந்திருப்பவரும், தலைமுடியில் மதியைச் சூடி இருப்பவரும் கைகளில் மண்டையோட்டை ஏந்தியிருப்பவரும் ஆகிய சிவபெருமான், எழுந்தருளியிருக்கும் ஊர் திருக்கழுக்குன்றமாகும். இந்த ஊரில் உழவனின் நெல் அரிகள் மீது ஏறி சிப்பிகள் ஈன்ற முத்தை தனது முட்டை என்று கருதி காடாகத் திகழும் தாமரைத் தடாகத்தில் வாழும் அன்னப் பறவை தனது சிறகால் அணைத்துக் கொள்கின்றன ! இத்தகைய நீர்வளமும் நிலவளமும் மிக்கது திருக்கழுக்குன்றமாகும் !

 

------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(maraimani2021@gmail.com)

ஆட்சியர்,

”தமிழ்ப் பொய்கை” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, ஆடவை (ஆனி) 17]

{01-0572022}

------------------------------------------------------------------------------------------





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக