புலவர் பலர் யாத்த பூந்தமிழ்ப் பாடல்களின் அணிவகுப்பு !

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 28 ஜூன், 2022

மலர் (22) வீரராகவர் பாடல் - மாலே நிகராகும் சந்திரவாணன் !

சந்திரவாணன் நாட்டில் தேன்மாரி பெய்கிறதாம் !

பிறவியிலேயே கண்பார்வை இழந்தவர் என்பதால் அந்தகக் கவிஎன்னும் அடைமொழி பெற்றவர் வீரராகவ முதலியார். அந்தகம்என்னும் வடமொழிச் சொல்லுக்கு பார்வை யின்மை என்று பொருள். பார்வையை இழந்து விட்டாலும் படிப்புத் திறனை அவர் இழந்து விடவில்லை !

தமிழைத் துளக்கமறக் கற்று   தமிழ்ப் புலமை அடைந்தவர் அந்தகக்கவி வீரராகவ முதலியார் !இவருடைய பாடல்கள் சொற்சுவையும் பொருள் நயமும் உடையவை. ஒருமுறை இவர் சந்திரவாணன் என்பவர் மீது கோவை பாடிக்கொண்டிருந்தார் !

-----------------------------------------------------------------------------------

அவர் பாடிய கோவைச் செய்யுள் வருமாறு:-

-----------------------------------------------------------------------------------

மாலே நிகராகுஞ் சந்திர வாணன் வரையிடத்தே

பாலே ரிபாயச்செந் தேன்மாரி பெய்யநற் பாகுகற்கண்

டாலே யெருவிட முப்பழச் சாற்றி னமுதவயன்

மேலே முளைத்த கரும்போவிம் மங்கைக்கு மெய்யெங்குமே !

-----------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

-----------------------------------------------------------------------------------

மாலே நிகராகும் சந்திரவாணன் வரை இடத்தே !

பால் ஏரி பாயச் செந்தேன் மாரி பெய்ய நற்பாகு கற்கண்டாலே !

எருவிட முப்பழச் சாற்றின் அமுத வயல் மேலே முளைத்த

கரும்போ இம் மங்கைக்கு மெய் எங்குமே !

-----------------------------------------------------------------------------------

இந்தச் செய்யுளை வீரராகவர் தன் மாணவனுக்குச் சொல்லி அவரை ஏட்டில் எழுதப் பணித்தார். அதனைக் கேட்டுக்கொண்டிருந்த திருப்பனையங்காட்டைச் சேர்ந்த அம்மைச்சி என்னும் மங்கை நல்லாள் கவிராயருக்குக் கண்தான் கெட்டது மதியும் கெட்டதோ? கரும்பு சேற்றில் முளைக்காது என்பது தெரியவில்லையேஎனச் சொன்னார் !

இதனைச் செவிமடுத்த புலவர் அம்மங்கையின் கூற்றை ஆய்ந்து அவள் சொல்வது சரிதான் என்பதை உணர்ந்து தன் மாணவனிடம் கொம்பை வெட்டி காலை நடுஎன்றார். மாணவரும் அதனைத் தெரிந்து கொண்டு சேற்றின் என்பதனைச் சாற்றின் என மாற்றம் செய்து படித்தார். கேட்டுக் கொண்டிருந்த புலவர் பெருமக்கள் யாவரும் மிக்க களிப்பெய்தனர் !

----------------------------------------------------------------------------------

பாடலின் பொருள்:

-----------------------------------

திருமாலைப் போன்று புகழ் பெற்று விளங்கும் சந்திரவாணன் ஆள்கின்ற நாட்டில் ஏரிகளில் இருந்து  பால் பெருக்கெடுத்துப் பாய்ந்து வயல்கள் எல்லாம் செழித்து விளங்க, வானிலிருந்து செந்தேன் மாரியாகப் பொழிகிறது !

கற்கண்டுப் பாகு  வயல்களுக்கு எருவாகிட அவ்வயல்களில் முக்கனிச் சாறு தேங்கி நிற்க  அச்சாற்றில் விளைந்த கரும்பின் சுவையை ஒத்திருக்கிறது இம்மங்கையின் மேனி !

-----------------------------------------------------------------------------------

கொம்பை வெட்டிக் காலை நடு:

-----------------------------------------------------------------------------------

இதன் பொருள் என்ன ? ”முக்கனிச் சேற்றின் அமுத வயல்என்று புலவர் முன்னதாகச் சொன்னார். அம்மைச்சி என்னும் மங்கை கரும்பு சேற்றில் முளைக்காதுஎன்றதும் புலவர் சேற்றில்என்பதில் வரும் கொம்பை (இரட்டைச் சுழி) வெட்டிவிட்டு, காலை நடு என்றார். அதாவது சேற்றில் என்பதை  சாற்றில்என்று மாற்றியமைத்தார் புலவர் !

குழுமியிருந்த அவைக்களப் புலவர்கள் யாவரும் வீரராகவரின் கவித்திறத்தை விதந்து பாராட்டினர்; நெஞ்சார வாழ்த்தினர் !

இப்படி ஓர் அருமையான பாடலைப் பாடிய கவிராயர், பாடலைக் கேட்க வந்த மங்கை சொன்ன திருத்தத்தையும் ஏற்றுச் செயல்பட்டது அவரது பணிவையும் பெருந்தன்மையையும் காட்டுகிறது !

--------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(maraimani2021@gmail.com))

ஆட்சியர்,

தமிழ்ப் பொய்கை” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, ஆடவை (ஆனி) 14]

{28-06-2022}

--------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக