வானம்பாடி படத்தில் ஒலித்த “தாதி தூது ” பாடல் !
-----------------------------------------------------------------------------------
காளமேகப்
புலவர் இரட்டுற மொழிதல் என்னும் வகையில் இரு பொருள்படும்படிப் பாடுவதில் வல்லவர். இந்தப்
பாடல் சற்று வேறுபட்டது !
----------------------------------------------------------------------------------
பாடல்:
----------------------------------------------------------------------------------
தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி
துத்தித் துதைதி துதைதத்தா
தாதுதி
தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த
தெத்தாதோ தித்தித்த தாது?
-----------------------------------------------------------------------------------
பொருள்:-
---------------
தத்தித் தாவிப் பறந்துசென்று பூக்களில் இருக்கும்
தேன் துளியாகிய தாதுவை உண்கின்ற வண்டே ! ஒரு பூவினுள் உள்ள தாதுவை (தேன் துளிகளை) உண்ட
பின்பு மீண்டும் வேறு ஒரு பூவினுள் சென்று தாது எடுத்து உண்ணுகிறாய். உனக்கு எந்தப்
பூவினுள் உள்ள தேன் (எத்தாது) தித்தித்தது (இனித்தது) ?
------------------------------------------------------------------------------------
குறிப்பு :
------------
இப்பாடலில் “த”கர வரிசை எழுத்துகள் மட்டுமே
பயன்படுத்தப் பட்டுள்ளன !
------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்சொற்பொருள்:-
------------------------------------------
தத்தி = பாய்ந்து பறந்து சென்று ; தாது = பூவில் இருக்கும் தேனை ; ஊதுதி = நுகர்கிறாய் (உண்கிறாய்) ; தாது ஊதி = அந்த மலரில் இருக்கும் தேன் துளிகளை உண்டபின் ; தத்துதி = மீண்டும் தத்திப் பறந்து அடுத்த மலருக்குச் செல்கிறாய் ; துத்தி = அந்த மலரில் உள்ள உண்பதற்குரிய தேனை ; துதைதி = நீ நெருங்கி ; துதை தத்து = மிகுதியாக அப்பூவில் பரவி ;
ஆ தாதுதி = அந்தத் தேனை உண்டு வெளிவருகிறாய்
; தித்தித்தது = அப்படி உண்ட தேன் உனக்கு இனிப்பாக இருந்திருக்கும் ; இத் தித்தித்த
= இந்த வகையில் இனிப்பான ; தாது எது ? = தேன் எந்த மலருடையது ? ; தித்தித்தது = இனிமை
ததும்பிய தேன் துளிகளில் மிகுதியும் இனித்தது ; எத் தாதோ ? = எந்த மலரின் தேன் துளியோ
? ; தித்தித்தது யாது = அவ்வாறு இனித்தமைக்குக் காரணம் யாது ?
------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(maraimani2021@gmail.com)
ஆட்சியர்,
“தமிழ்ப் பொய்கை” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு:
2053, விடை (வைகாசி) 27]
{10-06-2022}
----------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக