காக்கைக்கும் கூகைக்கும் ஆகாது !
காளமேகப் புலவர் கி.பி.15-ஆம்
நூற்றாண்டைச் சேர்ந்தவர். திருச்சி, திருவானைக்காவைச்
சேர்ந்தவர் என்று சொல்லப்படுகிறது. இரு பொருள் படும்படிப் பாடுவதில் வல்லவர் !
------------------------------------------------------------------------------------
காக்கைகா காகூகை
கூகைக்கா காகாக்கை
கோக்குக்கூ
காக்கைக்குக் கொக்கொக்க – கைக்கைக்குக்
காக்கைக்குக்
கைக்கைக்கா கா
-------------------------------------------------------------------------------------
பொருள்:-
----------------
[காக்கைக்கு ஆகாது கூகை; கூகைக்கு ஆகாது
காக்கை. நாட்டை ஆளும் அரசன், நாட்டைக் காப்பதற்கு கொக்கு போலக்
காத்திருக்க வேண்டும். இல்லையேல் அரசனுக்கு கசப்புக்குரிய காலமாக ஆகிவிடும் ]
------------------------------------------------------------------------------------
குறிப்பு:-
--------------
இந்தப் பாடலில் “க”கர வரிசை எழுத்துகள் மட்டுமே இடம் பெற்றுள்ளதைக் காண்க !
-----------------------------------------------------------------------------------
விளக்கம்:-
----------------
காக்கையானது பகலில் (கூகையை) ஆந்தையை வெல்ல முடியும். (கூகையானது)
ஆந்தையானது இரவில் காக்கையை வெல்ல முடியும். அதுபோல் அரசன் தம் நாட்டை இரவில் ஆந்தையைப்
போலவும், பகலில் காக்கையைப் போலவும் காக்க
வேண்டும். எதிரியின் வலிமைக் குறைவு
அறிந்து, கொக்கு காத்திருப்பது போல, தக்க நேரம் வரும் வரைக் காத்திருந்து தாக்க வேண்டும். தகுதியற்ற
காலம் எனில் அரசனுக்குக் கூட கையாலாகாதது ஆகிவிடக் கூடும் !
------------------------------------------------------------------------------------
சொற்பொருள்:-
-------------------------
காக்கைக்கு ஆகா = காக்கைக்கு ஆகாது; கூகை = கூகை எனப்படும் பேராந்தை (பெரிய ஆந்தை).;கூகைக்கு ஆகா = பேராந்தைக்கு ஆகாது; காக்கை = காகம் எனப்படும்
காக்கை; கோக்கு = அரசனுக்கு; கூ = பூமி; காக்கைக்கு = காப்பதற்கு; கொக்கு ஒக்க = கொக்கு போல உரிய காலம் வரும் வரைக் காத்திருக்க
வேண்டும்; (இல்லையேல்); காக்கைக்கு = நாட்டைக் காப்பாற்றுவதற்கு; கைக்கு = அரசனுக்கு; கைக்கைக்கு = கசப்புக்கு உரிய ;
ஐக்கு ஆகா= காலமாக ஆகிவிடும்.
------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(maraimani2021@gmail.com)
ஆட்சியர்,
”தமிழ்ப் பொய்கை”
வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு: 2053, விடை (வைகாசி)
26]
{09-06-2022}
------------------------------------------------------------------------------------
கூகை |
காக்கை |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக