மோர் விற்கும் பெண்ணைச் சீண்டும்
காளமேகம் !
நல்ல வெய்யில் நேரம் ! காளமேகத்திற்கு தொண்டை வறண்டு தாகம்
எடுக்கிறது ! ஆயர் குலப் பெண் ஒருத்தி மோரோ மோர் என்று கூவியவாறு தெருவில்
செல்கிறாள். அவளை அழைத்து ஒரு குவளை மோர் வாங்கி அருந்துகிறார். மோரில் தண்ணீர் மிகுதியாகக் கலந்து
இருந்ததால் அது நீர்த்துப் போய் சுவை
குன்றி இருந்தது. அவருக்கு மோர் விற்றவள் ஒரு பெண் அல்லவா ! அதனால் அவளை வைய மனம்
வரவில்லை. கோபத்தை வெளிக் காட்டாமல்
நகைச் சுவையோடு ஒரு பாடல் எழுதினார். அந்தப் பாடலைப் பாருங்கள் !
------------------------------------------------------------------------------------
பாடல்
------------------------------------------------------------------------------------
'கார்'என்று பேர்படைத்தாய் ககனத்து
உறும்போது;
'நீர்'என்று பேர்படைத்தாய் கொடுந்தரையில் வந்ததற்பின்;
வார்ஒன்று
மென்முலையார் ஆய்ச்சியர்கை வந்ததற்பின்,
'மோர்' என்று பேர்படைத்தாய் முப்பேறும் பெற்றாயே !
---------------------------------------------------------------------------------------
பொருள்:-
மோரே ! (அதாவது மோர் என்று பெயர் கொண்டிருக்கும் நீரே !) நீ
வானத்தில் இருக்கும் போது மேகம் என்ற பெயரைக் கொண்டிருந்தாய். பரந்த மண்ணுலகைச் சேர்ந்தவுடன் நீர் என்று
பெயர் கொண்டாய். கச்சையணிந்த மென்மையான
தனங்களையுடைய இடைச்சியர் கையில் சேர்ந்தவுடன் மோர் என்ற பெயரை பெற்றுக்
கொண்டாய். இவ்வாறு கார், நீர், மோர் என்று மூன்று பெயரையும் பெற்றதால் முப்பேறும் (மூன்று
தகுதிகளையும்) பெற்றுவிட்டாய் !
அதிகளவு நீர் கலக்கப்பட்ட மோர் என்பதை சிறிய எள்ளலும் நகைச்சுவையும்
இழையோடப் பாடியிருக்கிறார் காள மேகம்.
---------------------------------------------------------------------------------------
சொற்பொருள்:-
ககனத்து உறும்போது = ஆகாயத்தில் இருக்கும் போது; கார் என்று பேர் படைத்தாய் = மேகம் என்ற பெயரைத் தாங்கி நிற்கிறாய் ;
கொடுந்தரையில் வந்ததன் பின் = இந்த பூமிக்கு
வந்த பிறகு ; நீர் என்று பேர் படைத்தாய் = தண்ணீர்
என்ற பெயரைத் தாங்கி நிற்கிறாய் ; வார் ஒன்று = கச்சை அணிந்த ; ஆய்ச்சியர் கை
வந்ததன் பின் = ஆயர் குலப்பெண்னிடம் வந்த
பின்பு ; மோர் என்று பேர் படைத்தாய் = மோர் என்னும் பெயரைத் தாங்கி நிற்கிறாய்;
(மோர் என்னும் பெயரில் இந்தப் பெண்ணின் பானையில்
இருக்கும் தண்ணீரே ! நீ ) ; முப்பேறும் பெற்று விட்டாய் = ஒரே
நேரத்தில், மேகமாகவும், தண்ணீராகவும், மோராகவும் அழைக்கப்படும் மூன்று
பேறுகளையும் (தகுதிகளையும்) பெற்றுவிட்டாய்.
---------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(maraimani2021@gmail.com)
ஆட்சியர்,
“தமிழ்ப் பொய்கை”
வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு: 2053, விடை (வைகாசி)
23]
{06-06-2022}
---------------------------------------------------------------------------------------
![]() |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக