சினத்தில் விளைந்த செங்கரும்புத் துண்டு !
காளமேகம் பல ஊர்களுக்குச் சென்றுள்ளார். சென்ற இடங்களில் அவருக்கு
ஏற்பட்ட நிகழ்வுகளை வைத்துச் சில பாடல்களைப் பாடியுள்ளார். இவ்வாறு
நாகப்பட்டினத்திற்குச் சென்றிருந்த போது ஒரு சத்திரத்தில் அவர் நேர்கொண்ட
வாய்ப்பைப் பற்றி இப்பாடலில் பாடியுள்ளார்.
-------------------------------------------------------------------------------------
பாடல்:
-------------------------------------------------------------------------------------
கத்துக்கடல் நாகைக் காத்தான் தன் சத்திரத்தில்
அத்தமிக்கும் போதில் அரிசிவரும் - குத்தி
உலையிலிட ஊர்அடங்கும்; ஓரகப்பை அன்னம்
இலையிலிட வெள்ளி எழும்.
------------------------------------------------------------------------------------
[காளமேகம் மதிய உணவுக்காக சத்திரத்துக்குச் சென்றபோது, உணவுக்காக நெடு நேரம் காத்திருக்க வேண்டி இருந்தது. இதனால்
கோபமுற்றவர் சத்திர ஆட்சியாளரை இகழ்ந்து பாடிய பாடல் இது ]
-------------------------------------------------------------------------------------
பொருள்:-
------------------
நாகப்பட்டினத்தில் உள்ள காத்தான் சத்திரத்தில் (உணவு
விடுதியில்) சாப்பிடலாம் என்று மதிய
வேளையில் போனால், சூரியன் மறைந்த பின்புதான்
சத்திரத்துக்கு அரிசி வந்து சேரும்; பழுப்பேறிய அதை
உரலில் இட்டுக் குத்திப் புடைத்து உலையில் இடுவதற்குள் ஊர் மக்கள் எல்லாம்
உறங்கிபோவர். பின்பு சோறாக்கி அதை எடுத்து
வந்து என் இலையில் பரிமாறுவதற்குள் விடிந்து விடும்.
------------------------------------------------------------------------------------
சொற்பொருள்:-
---------------------------
கத்துக் கடல் = அலைகளின் ஆரவாரத்தால் எப்பொழுதும் ஒலி எழுந்து கொண்டிருக்கும் கடல்; நாகை = நாகப்பட்டினம்; காத்தான் சத்திரத்தில் = காத்தான் என்பவரது உணவு விடுதியில்; அத்தமிக்கும் போதில் = சூரியன் மறையும் நேரத்தில்; அரிசி வரும் = சமைப்பதற்காக அரிசி கொண்டு வருவார்கள்; குத்தி = பழுப்பு ஏறிய அந்த அரிசியை உரலில் இட்டுக் குத்திப் புடைத்து;
உலையில் இட = உலைப் பானையில் இட்டு வேகவைத்துச் சோறாக்குவதற்குள்;
ஊர் அடங்கும் = ஊர் மக்கள் எல்லாம் உறங்கி
விடுவர்; ஓரகப்பை அன்னம் = வெந்த சோறினை எடுத்து வந்து அகப்பையால் முகந்து;
இலையில் இட = சாப்பிடுவதற்காக அமர்ந்துள்ள என்
இலையில் போடுவதற்குள்; வெள்ளி எழும் = இரவு விடிந்து
வெள்ளியும் முளைத்துவிடும்.
------------------------------------------------------------------------------------
[ பின் குறிப்பு:- பாடலைக் கேட்டவுடன் சத்திர உரிமையாளர் ஓடிவந்து,
வந்திருப்பவர் காளமேகப் புலவர் என்பதை அறிந்து,
அவரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.
மனமிரங்கிய காளமேகம், தான் பாடிய பாடலுக்கு வேறு பொருள்
சொன்னார். எப்படி ?]
இவ்வாறு :-
”காத்தானது சத்திரத்தில், அத்தமிக்கும் நேரத்தில் அதாவது நாட்டில் உணவின்றி பஞ்சம் தலைவிரித்தாடும் காலத்தில் அரிசி மூட்டை மூட்டையாய் வந்திறங்கும். அரிசியைக் குத்தித் தூய்மையாக்கி உலையில் இட்டுச் சோறாக்கும் போது ஊர் மக்கள் எல்லாம், தமக்கு உணவு கிடைக்கவிருக்கும் மகிழ்ச்சியில் அமைதி காப்பார்கள் !
அங்கு பரிமாறும் உணவை உண்டு அந்த ஊரே பசி
அடங்கும். இலையில் அகப்பையால்
பரிமாறப்படும் சோறு , வெள்ளை வெளேரென்று வெள்ளிக் கோள் போலத்
தூய்மை மிக்கதாக இருக்கும் ! “
------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை :
வை.வேதரெத்தினம்,
(maraimani2021@gmail.com)
ஆட்சியர்,
“தமிழ்ப் பொய்கை”
வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு: 2053, விடை (வைகாசி)
26]
{09-06-2022}
------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக