போர்க்களத்தில் புகுந்து பகைவர்களை வெல்லும் வீரனை!
நினைத்தவுடன் பாடல் பாடும் புலமை வளம் கொண்டவர் காளமேகம் ! காளமேகம்
என்றால் கரிய மழை மேகம் ! மழை போல் கவிதை சொரியும் ஆற்றலால் தானோ என்னவோ
இவருக்குக் காளமேகம் என்னும் பெயர் வழங்கலாயிற்று !
-------------------------------------------------------------------------------------
பாடல்
-------------------------------------------------------------------------------------
செருப்புக்கு வீரர்களைச் சென்றுழக்கும் வேலன்
பொருப்புக்கு நாயகனைப் புல்ல – மருப்புக்குத்
தண்டேன் பொழிந்ததிருத் தாமரைமேல் வீற்றிருக்கும்
வண்டே விளக்குமா றே !
-------------------------------------------------------------------------------------
பொருள்.:
மேல்நோக்குப் பொருள்:-
செருப்புக்காக வீரர்களைக் கொன்று ஒழிக்கும் வேலனை நான் கண்டு கட்டித்
தழுவ வேண்டும்; அவனிடம் செல்லும் வழியை விளக்குமாறாகிய வண்டே நீ எனக்கு விளக்குவாயாக
!
--------------------------------------------------------------------------------------
கூர்நோக்குப் பொருள்;-
போர்க்களம் புகுந்து வீரர்களைச் சிதறடித்துப் போர் புரியும் குறிஞ்சி நிலத் தலைவனான வேலனை, நான்
நேரில் கண்டு பாராட்டிக் கட்டித் தழுவும் வகைபற்றி, தாமரை மலர்மேல் வீற்றிருக்கும் வண்டே எனக்கு விளக்கிக் கூறுவாயாக !
-------------------------------------------------------------------------------------
சொற்பொருள்:-
--------------------------
செரு = போர்க்களம்; புக்கு = புகுந்து; சென்று உழக்கும் = வீரர்களைக் கொன்று குவித்து வெற்றி ஈட்டும்;
பொருப்புக்கு நாயகனை = மலைகள் சூழ்ந்த குறிஞ்சி
நிலத்தின் தலைவனான ; வேலன் = மன்னவனாகிய வேலன் ;
புல்ல = ஆரத் தழுவிக் கொள்ள ; மரு = மணம் ; புக்கு = புகுந்து; தண் தேன் = குளிர்ச்சியான தேன்; பொழிந்த = பொழிகின்ற ; திருத் தாமரை
மேல் வீற்றிருக்கும் = அழகிய தாமரை மலர் மேல் அமர்ந்திருக்கும்; வண்டே = அறுகாற் பறவை எனப்படும் வண்டே; விளக்கு = விளக்கிச் சொல்வாயாக !
------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(maraimani2021@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பொய்கை”
வலைப்பூ,
திருவள்ளுவராண்டு: 2053, விடை (வைகாசி)
24]
{07-06-2022}
------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக