தமிழ்ப்பொய்கை !

புலவர் பலர் யாத்த பூந்தமிழ்ப் பாடல்களின் அணிவகுப்பு !

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 15 டிசம்பர், 2022

மலர் (60) இனியவை நாற்பது - குழவி பிணியின்றி வாழ்தல் இனிது !

கடைச் சங்க காலத்தில் தோன்றிய நூல்களுள் ஒன்று  இனியவை நாற்பதுமதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ் சேந்தனார் என்பவர்  இயற்றிய இந்நூலில் நாற்பது வெண்பாக்கள் உள்ளனஅறம், பொருள், இன்பம் பற்றிய  இனிய பொருள்களை எடுத்துரைப்பதால், இதற்குஇனியவை நாற்பதுஎனப் பெயர் வழங்கலாயிற்று ! இந்நூலிலிருந்து  ஒரு பாடல் !

-------------------------------------------------------------------------------

பாடல் எண்: (12)

----------------------

குழவி  பிணியின்றி  வாழ்தல்  இனிதே !

கழறும்  அவையஞ்சான்  கல்வி  இனிதே !

மயரிக  ளல்லராய்  மாண்புடையார்ச்  சேரும்

திருவுந்தீர்  வின்றேல்  இனிது !

------------------------------------------------------------------------------

 பொருளுரை:

------------------

குழந்தைகள்   நோய்நொடி  இல்லாது   இருந்தால்,    குடும்ப  வாழ்வு  இனிமை  உடையதாக  இருக்கும் !

அவை மரபு  அறிந்து, அதற்கேற்பத்  தன் கருத்துகளை  அச்சமின்றி  எடுத்து  உரைப்பவனின்  கல்வி  இனியதாகும் !

அறிவு மயக்கம் இல்லாத மாண்புடையவர்களிடம் சேரும் செல்வம், தீர்ந்து போகாமல்  இருத்தல்  இனியதாகும் !

-------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

------------------------------

குழவி = குழந்தை ; பிணியின்றி = நோய் நொடியில்லாமல்கழறும் = அவை மரபு அறிந்து சொல்கின்ற ; அவையஞ்சான் = அச்சமின்றி எடுத்துரைப்பவன் ; மயரி = அறிவு மயக்கம் ; அல்லராய் = இல்லாதவராய் ; மாண்புடையார் = பெருந்தகையார் ; திருவும் = செல்வமும் ; தீர்வு இன்றேல் = தீர்ந்து போகாமல் இருப்பின் .

-------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

----------------------

பெற்ற குழந்தை நோய்நொடி இல்லாமல் வாழ்தல், சொற்போருக்கு அஞ்சாக் கல்வி வளம்,  மயக்கம் இல்லாதவராகவும், மாட்சிமை உள்ளவராகவும் விளங்குவாரிடம் சேரும் செல்வம்,  அவரை விட்டுச் செல்லாமல் இருத்தல் ஆகியவை இனியவை !

-------------------------------------------------------------------------------

ஆக்கம் & இடுகை,

வை.வேதரெத்தினம்,

(maraimani2021@gmail.com)

ஆட்சியர்,

”தமிழ்ப் பொய்கை” வலைப்பூ

[திருவள்ளுவராண்டு:2053, நளி (கார்த்திகை)29]

(24-01-2021)

------------------------------------------------------------------------------